வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம்
வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.
அமைவிடம்
இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.
கோவில் அமைப்பு
9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம்.
மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்ட நாச்சியார்.
உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.
தலவிருட்சம் பவளமல்லி.
தல புராணம்
பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம் புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.
பெயர்க் காரணம்
உற்சவர் சோரநாதன், கள்ள பிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.
ஸ்ரீ வைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்ட நாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவரக் காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவரக் காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ள பிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறப்பு
இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீ வைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையோன் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
திருவிழாக்கள்
இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்ன வாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.