எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு : அமமுக மீது அதிமுக போலிசில் புகார்

Must read

சென்னை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, சசிகலாவின் ஆதரவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.  அவ்வகையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை சுமார் 10.15 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வ ம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, எம் எல் ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் அங்கு அஞ்சலி செலுத்தினர்.   அதன் பிறகு அவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டு தங்கள் காரில் புறப்பட்டுச் செல்லும் போது தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழி மறித்து கோஷம் எழுப்பினர்.

அதிமுக தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  அந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது அமமுகவினர் செருப்பு வீசியதால் கடும் பரபரப்பு உண்டானது.  மேலும் அதிமுகவினர் சார்பில் அமமுகவினர் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில் அமமுகவினர் அதிமுகவினர் மீது செருப்பு மற்றும் கற்களை வீசியதாகக் கூறப்பட்டுள்ளது.  மேலும் அமமுகவினர் தாக்குதல் நடத்த இரும்பு தடி, கம்பு கட்டை கொண்டு வந்துள்ளதாகவும்  பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article