கொழும்பு: இலங்கையில் தொடரும் பதற்றத்தால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோத்தபய தம்பிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை  உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 28 வரை நீதிமன்ற அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று கூறி உள்ளது.

இலங்கையில் ராஜபக்சேக்களின் தான்தோன்றித்தனமான ஆட்சியின் அவலத்தால், அங்க வரலாறு காணாத வகையில்கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  சொல்ல முடியாத  துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

மக்களின் போராட்டம் காரணமாக, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஏற்கனவே பதவி விலகிய நிலையில், அதிபராக இருந்த கோத்தபய, பதவி விலக மறுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இதனால் அங்கிருந்து தப்பிய கோத்தபய, ராணுவத்தினர் பாதுகாப்புடன் மாலத்தீவில் அடைக்கலம் புகுந்தார். ஆனால், அங்கும் மக்கள் எதிர்ப்பு எழுந்தால், அங்கிருந்து கிளம்பிச்சென்று சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ரணில் தற்காலிக அதிபராக பதவி ஏற்றுள்ளார்.  அங்கு ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. தலைநகர் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கோத்தபய சகோதரர்களான  இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜூலை 28ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.