கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவருடைய உடமைகளை சூறையாடி உள்ளனர் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகையின் சமையலறைக்குள் புகுந்து அங்குள்ள உணவுப்பொருட்களை எடுத்து சமைத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ள இலங்கையின் பொருளாதாரம் மிக அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக குறைந்துவிட்டதால், வெளிநாடுகளின் உதவியைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு ஏராளமான உதவிகளை செய்த நிலையிலும், இன்னும் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதனால்,  அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பொருட்களின் விலை அனைத்தும் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. தினசரி 12 மணி நேர  மின்வெட்டு என மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த சில வாரங்களுக்கு குறைந்திருந்த போராட்டம் கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள், அவரது மாளிகை உள்ள பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய இல்லத்தின் முன் திரண்டு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், மதகுருக்கள், மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் உச்சநிலையை அடைந்தத போராட்டக்காரர்கள் இன்று அதிபர் கோத்தபய ராஜக்பக்சேவின் இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  அதிபர் கோத்தபய ராணுவத்தினர் உதவியுடன் அங்கிருந்து  தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.  போரட்டக்காரர்கள் யாரும் கோத்தபய ராஜபக்சே இல்லத்துக்குள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து, பலத்த பாதுகாப்பு போடப்பட்ட போதிலும், அதை மீறி போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழலோடு காணப்பட்டது.

அதற்குள் அதிபர் இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள அறைகளை சுற்றி பார்த்து, சூறையாடியதுடன், மற்றொரு தரப்பினல், அங்கிருந்த  நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மற்றொரு தரப்பினரோ, அதிபர் மாளிகையில் உள்ள சமையலறையில் புகுந்து அங்குள்ள உணவுப்பொருட்களை வைத்து, சமையல் செய்வதில் ஆர்வம் காட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

 இந்த நிலையில் அவசர நிலை குறித்து கலந்தாலோசிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…