ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

1945 இரண்டாம் உலக போருக்குப் பின் ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்ற இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் மட்டுமன்றி ஜப்பானில் நீண்டகால பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையும் பெற்றவர் ஷின்சோ அபே.

நான்கு முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள அபே 2006 ம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற போது அவருக்கு வயது 52. இளம் வயது முதல் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் 2007 ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 2012 முதல் 2020 வரை தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பொறுப்பேற்ற அவர் 2020 ம் ஆண்டு உடல்நிலை காரணமாக மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

67 வயதாகும் அபே 2012 முதல் 2020 வரை ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தார். லிபரல் ஜனநாயக கட்சியின் ஆளுமை மிக்க தலைவராக செயல்பட்டு வந்த இவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் மேலவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது நரா நகரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த போது நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக யமகாமி டெட்சுயா என்ற 41 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாய்க்கு தொல்லை கொடுத்து வந்த அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக அபே நடந்து கொண்டதாகவும் அதனால் அபே-வை சுட்டுக்கொன்றதாகவும் கூறினார்.

அந்த குறிப்பிட்ட அமைப்புக்கு தனது தாயார் பெருமளவு நிதி அளித்திருப்பதாகவும் ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் தங்கள் குடும்பத்தில் பிரச்சனை நிலவியதாகவும் கூறியுள்ளார்.

யமகாமி டெட்சுயா-விடம் இருந்து 40 செ.மீ. நீளமுள்ள நாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது இதனை அவரே தயார் செய்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு வடிவங்களில் உலகோங்கள் மற்றும் மர துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விசாரணைக்காக 90 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளது ஜப்பான் அரசு.

இந்த நிலையில் இன்று காலை அபே-வின் நரா-வில் இருந்து டோக்கியோ கொண்டு செல்லப்பட்டது. திங்கட்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் செவ்வாயன்று நினைவு அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.