இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டைசீர்குலைத்த பக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அப்போது, இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர் பதவி விலகினார். தொடர்ந்து,  புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் கோத்தபய பதவி விலக மறுத்து, அதிபராக நீடித்து வருகிறார்.

புதிய பிரதமர்,  ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகின்றன. எனினும், இலங்கையில் நிலைமை சீரடையவில்லை. மாறாக, மேலும் மோசடைந்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையிலும், இலங்கையின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறியதால் கோத்தபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் பொதுமக்கள் சார்பில் தலைநகர் கொழும்பில்  போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

போராட்டக்காரர்கள் கூடுவதைத் தடுக்க கொழும்பு மற்றும் புறநகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ள நிலையில், அவர்கள் உள்ளே சென்றுவிடாமல் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக இலங்கை ராணுவம்  தெரிவித்து உள்ளது.  அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி அதிபர் மாளிகை முன் லட்சக்கணக்கானோர் திரண்டதால் போலீசாரும் செய்வதறியாது வேடிக்கை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் கையில் சிக்காமல் இருக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.