ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், அங்கு சாமானயி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், உணவுக்கு திண்டாடும் நிலை உருவாகி வருகிறது. இதையடுத்து, அங்கிருந்து பலர் வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கிய நிலையில், அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.

அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக  இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முன்னணியில் நின்று உதவி வந்தாலும், அங்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதுடன், உணவு உள்பட  அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருதரப்பினர் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், பலர் வாழ்வாதாரம் தேடி அண்டைய நாடுகளை நோக்கி அகதிகளாக செல்லும் அவலம் எற்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கடல் வழியாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.