இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 55 பேரும் விடுதலை…

Must read

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய படகின் உரிமையாளர்கள் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, தமிழக மீனவர்களை விடுவிக்க மத்தியஅரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்த நடத்தி வந்தது. அதைத் தொடர்ந்து, இன்று  இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலுமி, மீனவர்கள் பயன்படுத்திய 8 படகுகளில் உரிமையாளர்கள் வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறுமென நீதிபதி அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

 

More articles

Latest article