கொழும்பு:

காத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை  முன்னிட்டு, மகாத்மாவை கவுரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகள் காந்தியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், இலங்கையும் 2 வகையான தபால்தலைகளை வெளியிட்டு மகாத்மாவுக்கு சிறப்பு சேர்த்துள்ளது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் கடந்த 02.10.2018 தேதி முதல் 02.10.2019 தேதி உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது.

காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர் 1948 ஆகஸ்டு 15ஆம் தேதி இந்திய அரசு காந்தியடிகளுக்கு முதன்முறையாக தபால் தலைகளை வெளியிட்டது. பின்னர் 1961ஆம் ஆண்டில், அமெரிக்கா முதல் அயல்நாடாக காந்தியடிகளுக்கு தபால்தலையை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டது. அதைத்தொடர்ந்து ரஷ்யா, பிரேசில், சிரியா, கியூபா, வெனிசுவேலா, ஜிப்ரால்டர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் காந்தியடிகளுக்கு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளன.  இந்த ஆண்டு, பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள்  தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அலரி மாளிகை யில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்து, இலங்கையின் தபால்துறை அமைச்சர் ஹலிம், அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையின் அஞ்சல் துறை சார்பாக ரூ.45 மற்றும் ரூ.100 (இலங்கை ரூபாய்) மதிப்பில் இரண்டு சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்துவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு காந்தியின் உருவச்சிலை வழங்கினார்.