ரியாத்

ஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் சுற்றுலா செல்லும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அறை எடுத்து தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை சார்ந்தே சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அமைந்துள்ளது.. இதனால் வேறு வழிகளிலும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசு எடுத்து வருகிறது. தற்போது அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே இருக்கிறது.  வரும் 2030ம் ஆண்டுக்குள் இதை சுமார் 10 சதவீதமாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இது வரை சவுதியில் மெக்கா, மதீனா போன்ற ஆன்மீகப் பயணிகள், தொழில், விளையாட்டுப்  பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது ஆனால் இனி 49 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்போவதாக சவூதி அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதுவரை ஆண் மற்றும் பெண் வெளிநாட்டுப் பயணிகள் தங்களுக்கு இடையேயான உறவை நிரூபிக்கும் சான்று அளித்தால் மட்டுமே ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்க முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது.   இதற்குப் பட்டத்து இளவசரர் முகமது பின் சல்மான் தலைமையிலான நிர்வாகம் முடிவு கட்டியுள்ளது.

இனி உறவுக்கான ஆதாரங்கள் ஏதுமின்றி, அடையாள அட்டை மட்டுமே காட்டி வெளிநாட்டைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வெளிநாட்டுப் பெண்கள் அடையாள அட்டை மட்டும் காண்பித்து தனியே விடுதி அறை எடுத்துத் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை  சவுதியைச் சேர்ந்த பெண்கள் தனியே விடுதி அறை எடுத்துத் தங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.   அந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு சவுதி பெண்கள், குடும்ப அடையாள அட்டையைக் காண்பித்து தனியே விடுதி அறையில் தங்கலாம் என்றும், அதேசமயம் உடன் ஏதேனும் ஆண் தங்கினால் சவுதி பெண்ணுக்கும் அந்த நபருக்குமான உறவு குறித்து ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சவுதி சுற்றுலாத்துறை விளக்கமளித்துள்ளது.