கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இனவெறிக்குப் புகழ்பெற்ற கோத்தபாய ராஜபக்சேவின் இலங்கை குடியுரிமை குறித்து கேள்வியெழுப்பிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

இதன்மூலம் வரும் நவம்பர் 16ம் தேதி நடக்கவுள்ள இலங்க‍ை அதிபர் தேர்தலில் கோத்தபாய போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கோத்தபாய அமெரிக்க குடியுரிமையைப் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது இலங்கை குடியுரிமையைத் திரும்ப பெற்றார் என்று அவருக்கு எதிரான மனுதாரர்களான காமினி வியங்கோடா மற்றும் சந்திரகுப்தா தெனுவாரா ஆகியோரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு எதிர்வாதத்தை வைத்த ராஜபக்சே தரப்பு, அப்போது அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே, தனது சகோதரரின் குடியுரிமை ஆவணத்தில் கையெழுத்திட அதிகாரமுண்டு என்ற வாதத்தை முன்வைத்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இறுதியாக கோத்தபாயவின் குடியுரிமையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து ஒருமனதாக தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிபதிகளின் அறையில் பல வழக்கறிஞர்கள், முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் கூடியிருந்தனர். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பை முழுமையாக வாசித்து முடிக்கும் முன்னரே சிலர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.