பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது திடீரென நுழைந்த முகமூடி நபர்கள், கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த உபகரணங்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்டவைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆனால், காவல்துறை அருகில் இருந்தும் தங்களுக்கு உதவவில்லை என்று தாக்குதலுக்கு உள்ளான அலுவலகங்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அரேபியா ஹதத், பலவுஜா, அல் ஷார்குயா, ஸ்கை நியூஸ் அரேபியா, திஜ்லா மற்றும் என்ஆர்டி ஆகியவற்றின் அலுவகங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே இத்தாக்குதல் என்று கூறப்படுகிறது.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.