ஃப்ளாரிடா: பல்வேறு தடங்கல்கள் மற்றும் தாமதத்திற்குப் பிறகு, விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் முதல் விண்வெளி நடை செயல்பாடு அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

கடந்த 1965ம் ஆண்டு முதலே விண்வெளி நடை செயல்பாடு நடைபெற்று வந்தாலும், பெண்கள் மட்டுமே பங்குகொண்ட நிகழ்வுகள் நடைபெற்றதில்லை. இதுவரை அவற்றில் 14 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். ஆனால், அதில் பங்க‍ேற்ற ஆண்களின் எண்ணிக்கை 213.

தற்போது விண்வெளியில் உள்ள சோலார் ஆற்றல் அமைப்பில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரிகளை பொருத்துவதற்காக, கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மேய்ர் ஆகிய இரண்டு பெண் விண்வெளி வீராங்கணைகள் மட்டும் பங்கேற்கும் விண்வெளி நடை செயல்பாடு நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

பேட்டரி தொடர்பான பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மொத்தம் 5 விண்வெளி நடை செயல்பாடுகளில் இது நான்காவது ஒன்றாகும். நாசாவின் விண்வெளித் திட்டப் பயணத்தில், பெண்கள் மட்டு‍மே பங்குபெறும் விண்வெளி நடை செயல்முறை என்பது ஒரு புதிய மைல்கல். நாசாவின் அத்தனை வகையான இயக்கச் செயல்பாடுகளிலும் பெண்கள் பங்காற்றி வருகிறார்கள் என்று கூறியுள்ளார் நாசாவின் முதன்மை துணை தலைவர் மேகன் மெக்ஆர்தர்.