ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில், வேலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற ஸ்ரீபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு வரும். ஆனா, இப்ப பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கான பொற்கோவில் இருக்குறது மாதிரி இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் இருக்கு. கோவிலின் சுத்தம், நீர் மேலாண்மை, குப்பைக்கழிகளின் மறுசுழற்சி, கழிவுநீரை சுத்திகரித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்துதல், குறைந்த செலவில் மருத்துவம்ன்னு சில விசயங்கள் பிடிக்கும். இக்கோவிலில் பிடிக்காத விசயம் கோவிலை வியாபார தலமாக்கியது.

சமீபத்துல உருவான இந்த கோவில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மலைக்கோடி என்னும் இடத்தில் இருக்கு. இந்த கோவிலுக்கு (Sri Narayani Peedam) நாராயணி பீடம் ன்னு பேரு. இந்த கோவிலை நிர்மாணிக்க காரணமானவர் சக்தி அம்மா . இக்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தகட்டினால் வேயப்பட்டது. இந்த கோவில் நால்வகை வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முழுக்க முழுக்க தங்கத்தாலான கோவில்களில் இது இரண்டாவது கோவில். இந்த தங்கக்கோவில் சுமார் 5,000 சதுர அடிப்பரப்பளவு பரந்து விரிஞ்சிருக்கு, . தங்க கோவிலில் “நாராயணி அம்மன்” (Narayani Amma). வீற்றிருக்கிறாள். இவள் லட்சுமி தேவியின் அம்சம்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நாராயணி அம்மன் இப்பகுதியில் சுயம்புவாய் தோன்றி இருக்கிறாள். சிறிய குடிசை அமைத்து இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வந்திருக்கின்றனர். மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்தது. இங்கு சித்தர்களும், யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நாராயணி அம்மன் உபாசகரான சக்தி அம்மாவின் விருப்பத்தின்பேரில் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் பொற்கோவில் கட்ட ஆரம்பித்து 2007ல் கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்தது.

500 ஆண்டுகால பழமையான கோவிலாய் இருந்தாலும், நெடிதுயர்ந்த நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர், சிசிடிவி கேமரா, ஆன்லைன் புக்கிங் என டிஜிட்டல் மயமாவும் இருக்கு இக்கோவில். வழக்கமான கோவில் உண்டியலுக்கு பதிலாய் கோட் சூட் அணிந்த இளம்பெண்கள் மானிட்டர் முன் நின்று கிரெடிட் கார்டை தேய்த்து நன்கொடைகளை வசூலிக்குறாங்க.

கோவில் வளாகத்திலேயே அன்னலட்சுமி சைவ உணவகம் நாலு மாடி யில் நமக்கு பசியாற்றுது. நாராயணி அம்மனின் லட்டு பிரசாதம் ஒன்று ரூபா பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவிலை சுத்தி அகழி ஒன்னு இருக்கு.

கோவிலை பறவையின் பார்வையில் பார்க்கும்போது சுதர்சன சக்கர அமைப்பில் இருக்கு. சக்கரத்தின் நடுவில் நாராயணி அம்மன் வீற்றிருக்கிறாள். சுமார் இரண்டு கிமீ தூரத்துக்கு நட்சத்திர அமைப்பில் அமைந்த பாதையை சுற்றி வந்து அம்மனை தரிசிக்கனும். கோவில் வளாகம் முழுக்க பச்சை பசேலென புல்வெளிகளும், மரங்களும் நிறைந்து நமக்கு சுத்தமான காற்றை அளிக்குது. அத்தோடு நடக்குற கஷ்டம் தெரியாம இருக்க ஆங்காங்கு முயல், மான், மயில் மாதிரியான சிற்பங்களும், துர்க்கை அம்மன், சரஸ்வதி தேவி சிற்பங்களும், செயற்கை நீரூற்றுகளும், செயற்கை குன்றுமென ஒரு சினிமா செட்டிங்க்க்குள் வந்த மாதிரி இருக்கு.

நட்சத்திர வட்டத்தை சுற்றி முடித்து இறுதியாக தங்கக் கோவிலை அண்மித்தோம். சூரிய ஒளிபட்டு அந்த இடமே ஜொலித்து கொண்டிருந்தது. மனிதனுடைய காமம், குரோதம், மதம், லோபம், சாத்வீகம், அகந்தை, டம்பம், ராஜஸம், தாமஸம், ஞானம், மனம், அஞ்ஞானம், கண், காது, மூக்கு, நாக்கு, மெய்யென வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைச்சிருக்காங்க.

ஆங்காங்கு சக்தி அம்மன் படமும், அவரின் அருளுரைகளையும் நம் கவனத்துக்கு கொண்டு வர பொறிச்சு வச்சிருக்காங்க. சாண்டிலியர் விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் இங்க இருக்கு. இதுலாம் இரவை பகல் போல மாற்றுது. ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

பாதுகாப்பு காரணமாய் செல்போன், கேமராவை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை போட்டிருக்காங்க. அதிக தூரம் நடக்க முடியாதவர்களுக்கென சக்கர நாற்காலி (Golden Temple Vellore Wheelchair) வசதி உண்டு.