அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்…!!

  

அமைவிடம் :

சபரிமலை சன்னதி போலவே அமைந்துள்ள இத்தலம் நங்கநல்லூர் சென்னையில் அமைந்துள்ளது. கேரள பாணியில் இக்கோயிலின் நுழைவுவாயில் அமைந்துள்ளது.

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர், சென்னை.

எப்படி செல்வது?

இத்தலம் சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. சென்னையின் அநேக இடங்களிலிருந்தும் நங்கநல்லூருக்கு மாநகர பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு :

சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சி கொடுக்கிறதோ அதேபோன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. இங்கே ஐயப்பன் தானே விரும்பி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தலத்து ஐயப்பனுக்குரிய திருவாபரணங்களை பந்தள மகாராஜா அரண்மனையில் வைத்து பூஜித்துவிட்டு அதை இங்கு எடுத்து வந்து இந்த ஐயப்பனுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்படுவது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்!

சபரிமலை மூலவருக்கு நடை திறந்திருக்காத நாட்களில் அவர் மீது விபூதி பூசி வைப்பது பழக்கம். இந்த தலத்து ஐயப்பன் அங்கு சென்றபோது அவர் மீதும் அந்த விபூதி பூசப்பட்டது. அதுமட்டுமல்ல, சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களின்போது நான் அங்கு இருப்பேன்… நடை சாற்றியிருக்கும் நாட்களில் இங்கு இருப்பேன் என்று தேவபிரசன்னத்திலேயே ஐயப்பன் கூறியிருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

கார்த்திகை மாதம் முழுவதும் சூரியபகவான் ஐயப்பன் மீது தனது ஒளியைப் பாய்ச்சி அவரது அருளைப் பெற்றுச் செல்வது இக்கோயிலின் மேலுமொரு சிறப்பாகும்.

இத்தலத்தில் உள்ள மூலவர் சன்னதி சபரிமலை போலவே தக தகவென மின்னும் பொன் தகடுகள் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த தலத்து ஐயப்பன் இங்கு பிரதிஷ்டை ஆவதற்கு முன்னால் சபரிமலைக்குச் சென்று பம்பா நதியில் நீராடி பிறகு பதினெட்டு படிகள் ஏறி தன்னையே தரிசனம் செய்து விட்டுத்தான் இங்குக் கருவறையில் அமர்ந்து கொண்டார்.

கோயில் திருவிழா :

பங்குனி உத்திரம், தமிழ் வருடப் பிறப்பு, கார்த்திகை மாதத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை) பால்குடம் எடுத்தல், அகண்ட அன்னதானம், திருவீதி உலா, ஆராட்டு விழா என ஏக அமர்க்களமாக உற்சவங்கள் நடைபெறுகிறது.

வேண்டுதல் :

பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற இங்குள்ள ஐயப்பனை வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பால்குடம் எடுத்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.