ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச் 17ம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் ஜக்கி வாசுதேவ் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு சத்குரு, வென்டிலேட்டர் உதவியின்றி “நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார், மேலும் அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய அளவுருக்கள் மேம்பட்டுள்ளன” என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

66 வயதான சத்குரு ஜாக்கி வாசுதேவ் ஆன்மீகம் தவிர ஈஷா அறக்கட்டளை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த ஜக்கி வாசுதேவ தனது வலியையும் பொருட்படுத்தாமல் மார்ச் 8 ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் பக்திப் பரவசத்தில் நடனமும் ஆடினார்.

மார்ச் 15ம் தேதி அவரது தலைவலி மோசமடைந்ததை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மண்டை ஓட்டில் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு முன் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் புதிதாக ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு நிலையில் ஓரிருநாட்கள் தள்ளிப்போட நினைத்த நிலையில் மார்ச் 17 ம் தேதி அவருக்கு சுயநினைவு குறைந்து இடது கால் பலவீனம் அடைந்தது.

இதனையடுத்து மண்டை ஓட்டில் உள்ள ரத்தக் கசிவை அகற்ற அவசரமாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.