சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
வரும் 15ந்தேதி பொங்கல் பண்டிகை வருவதால், நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்தபந்தங்களுடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் ரயில்வே சிறப்புபேருந்துகளையும், ரயில்களையும் இயக்கி வருகிறது.
அதன்படி தெற்கு ரயில்வே தரப்பில் ஏற்கனவே தென்மாவட்ங்கள் மற்றும் பெங்களூருக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது, கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
அந்த வகையில் கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 16,17 தேதிகளில் இரவு 8.45 மணிக்கு சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பின்னர், தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.