சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று ஆளுநர் வருவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு இன்று  காவல்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான முறைகேடு புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில்,  இன்று திடீரென மீண்டும் பெரியார் பல்கலைக்கழகம் உள்பட  6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முறைகேடு புகாரில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடைநீக்கம் செய்ய பல்கலை. ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்கலை. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காத ஆளுநர் இன்று துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலை. நிர்வாகிகளை சந்தித்து பேசு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  முறைகேடு புகாரில் சிக்கியவர்களை ஆளுநர் சந்தித்து பேசுவதாக குற்றம் சாட்டி பல்கலை. ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். திமுக மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆளுநர் வருகைக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.  ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரியார் பல்கலை. முன் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்துறை பேராசிரியர் பெரியசாமி அலுவலகம், துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்பட பல்கலை. வளாகத்தில் உள்ள 6 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்ட சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி/எஸ்டி பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கருப்பூர் காவல்நிலையத்தில் பேராசிரியர்கள் நந்தீஸ்வரன், நரேஷ்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் உதவி காவல் ஆணையர் நிலவழகன் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில், அவர் வரும் நாளில் தமிழ்நாடு அரசு காவல்துறையை கொண்டு சோதனை நடத்துவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.