டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11மணிக்கு கூடும் நிலையில், மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருப்பதாக தகவல் வளியாகி உள்ளது.

இன்று தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் பரிசீலனை செய்து நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.  இன்றைய முதல்நாள் கூட்டத்தொடர் நாடாளுமன்ற  பழைய கட்டிடத்தில்  தொடங்குகிறது.  தொடர்ந்து நாளை முதல்  22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது.

முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனை, நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. இதை,  பிரதமர் மோடி மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு  தொடங்கி வைத்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடமாநிலங்களில்  நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், அதை முன்னிட்டு பாராளுமன்ற அவை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின்போது  பல மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

சிறப்புக் கூட்டத் தொடரில் மொத்தம் 8 மசோதாக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். அதில் ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நடைபெறும்.

ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாகசெப்டம்பர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. கூட்டத்தின் நோக்கம் என்பது தொடர்பாகவும், நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடரால், பொதுமக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தம் 8 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அதில், முதியோர் நலன் தொடர்பான ஒரு மசோதாவும், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் நலன் தொடர்பான 3 மசோதாக்களும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், மசோதாக்கள் என்ன என்பது தொடர்பான தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால், தாக்கல் செய்ய அதிக வாய்ப்புள்ள சில மசோதாக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரவை செயலாளரை தேர்வுக் குழுவில் இடம்பெற செய்யும் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
ஏற்கனாவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா அஞ்சல் அலுவலக மசோதா ஆகியவை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

இதுமட்டுமின்றி, மூத்த குடிமக்கள் நல மசோதா 2023, பட்டியலின மற்றும் பழங்குடியின நலன் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும்,   நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்படாத சில மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,

நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என மாற்றுவது தொடர்பான மசோதா, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா, மக்களவ மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீழு வழங்கும் மசோதா
மாநிலங்களவயில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தண்டனை சட்டம் தொடர்பான மசோதா, ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதமே இன்றி நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் கேள்வி நேரமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.