சென்னை:

விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக புகாருக்கு ஆளாகியிருக்கும் ஈஷா யோகா மைய கட்டிடங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையம் செயல் படுகிறது.

இந்த யோகா மையத்தின்மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இற்கிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு 112 அடி ஆதி யோகி சிலை நிறுவப்பட்டது. இதை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

அந்த பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் கால்வாயை ஆக்கிரமித்து ஆதி யோகி சிலை கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பதில் அளித்தார்.

அதில், “ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புகார்குறித்து ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்யப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு விதிகளைத் தளர்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தடையில்லாச் சான்று அளித்ததால், மலைதளக் குழு சிறப்பு அனுமதி அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.