மகிழ்ச்சி: இயற்கை திறந்து வைத்த போரூர் மேம்பாலம்!

சென்னை,

டும் வாகன நெருக்கடியில் சிக்கி வந்த போரூர் பகுதியில், கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் திறந்து வைக்க காலதாமதம் செய்யப்பட்டு வந்தது.  இன்று பெய்த மழையின் காரணமாக பயங்கர வாகன நெரிசல் ஏற்பட்டதன் வாயிலாக, வாகன ஓட்டிகளை தடைகளை அகற்றி, மேம்பாலத்தில் போக்குவரத்தை தொடங்கினர்.

இதையறிந்த போக்குவரத்து காவல்துறையினர் செய்வதறியாது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வாகன நெரிசலை குறைத்தனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போரூர் ரவுண்டனாவும் ஒன்று. இங்கு, மேம்பாலம் கட்டுவதற்கு 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது   திட்டம் தீட்டப்பட்டு ரூ.34 கோடியில் பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக, பாலத்தின் டிசைனை மாற்றியமைத்து,  பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.54 கோடி செலவில் புதிய வடிவமைப்புடன் மேம்பாலம் கட்ட அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. 7 ஆண்டுகளாக மந்த கதியில் பணி நடைபெற்று  காரணமாக அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மேம்பால பணிகள் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்துள்ள நிலையில், முதல்வர் தேதி கிடைக்காததால் பாலத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து  இந்த மாத இறுதியில் பாலத்தை திறக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக  சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிட்டிக்குள் வரும் போரூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பெய்த மழையால், போரூர் ரவுண்டான பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலம் ரெடியாகியும் திறந்து வைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒருசிலருடன், பாலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தடைகள்  அகற்றப்பட்டு, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதைக்கண்ட போக்குவரத்து அதிகாரிகளும், மேம்பாலத்தின் மீதுள்ள தடைகளை அகற்றி, வாகன போக்குவரத்திற்கு அனுமதித்தனர்.

இதன் காரணமாக  பல மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள், மேம்பாலம் வழியாக தங்களது பயணத்தை தொடர்ந்தன.

முதல்வர் வந்துதான் திறக்கப்படும் என்றிருந்த பாலத்தை, இயற்கை தனது சக்தியால் திறந்து விட்டுவிட்டதாக அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


English Summary
Joy: Nature opened Porur Roundana over bridge today