சிவகுமார்-திருப்பதி சர்ச்சை.. தேவையே இல்லாத ஆணி..

Must read

சிவகுமார்-திருப்பதி சர்ச்சை.. தேவையே இல்லாத ஆணி..

கோவில் என்றால் நல்லவன், கெட்டவன், பத்தினி, பரத்தை, .குளித்தவன், குளிக்காதவன்,என்று பல்வேறு தரப்பினர் வரத்தான் செய்வார்கள். அவர்களையெல்லாம் தரம் பிரித்துப் பார்ப்பது கோவில் நிர்வாகத்தின் வேலை அல்ல. அது முடியவும் முடியாது. வெளிப்படையாகத் தெரியும் சில கட்டுப்பாடுகளை மட்டுமே கடைப்பிடிக்கமுடியும்.

அவ்வளவு ஏன்? கோவில்களுக்குள் இருப்பவர்களிலே சிலர் பணத்தாசை, பெண்ணாசை எனக் கேவலமான காரியங்களில் ஈடுபடவும்தான் செய்கிறார்கள். அதற்காகப் பலரும் மதிக்கும் கோவில்கள் அதன் புனிதங்களை இழந்துவிடுவதில்லை. கேவலமான மனிதர்கள் போன பிறகும் கோவில்கள் வாழும்.

இப்படிப்பட்ட சூழலில் அந்தஸ்து பேதம் பார்ப்பதை அடியோடு கைவிடவும் முடியாது. சட்ட பரிபாலனம், மருத்துவச் சிகிச்சை போன்ற விஷயங்களில் மட்டுமே அந்தஸ்து பேதம் இருக்கவேமுடியாது. இருக்கவும் கூடாது. சில இடங்களில் சில நேரங்களில் அந்தஸ்து பேதம் கண்டிப்பாக தலைதூக்காமல் விடாது.  நம்மையே எடுத்துக்கொள்வோம்..

வீட்டில் திருமணம் என்றால் ஊர் முழுக்க பத்திரிகை கொடுக்கிறோம். விசேஷத்திற்கு வரும் அத்தனை பேரையும் ஒரே மாதிரியா உபசரிப்போம்? நம் வாழ்வில் ஒளியேற்றிவைத்தவர், மரியாதைக்குரிய பெரியோர் என்றால் சிறப்பு கவனிப்பு கொடுக்காமலா இருக்கிறோம்?

துக்க வீட்டிற்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு விஐபி வந்தால், துக்க வீடே சோகத்தை பின்னிக்குத் தள்ளிப் பரபரப்பாவது இல்லையா?

கோவில்கள் பொதுவான இடங்கள் என்றாலும் அங்கும் சில சமயங்களில் இந்த முக்கியத்துவம் தவிர்க்கமுடியாததாகவே இருக்கும். பிரதமரோ முதலமைச்சரோ வரும்போது வரிசையில் நிற்கச்சொல்லமுடியுமா? ஆனால் அவர்கள் விரும்பினால் பாதுகாப்பு அதிகாரிகள் தலையாட்டினால் பக்தர்களோடு பக்தர்களாய் வரிசையில் காத்திருந்து தரிசித்து விட்டுச் செல்லலாம். அது அவர்களின் சுயமுடிவை பொருத்தது.

சில வேளைகளில் கோவிலுக்குப் பணத்தைக் காணிக்கையாகப் பெருமளவில் வாரி வழங்குபவருக்குக் கொஞ்சம் முன்னுரிமை கொடுத்தே தீரவேண்டி இருக்கும். அந்த ஒரு பக்தர் கொடுக்கும் காணிக்கையை வைத்து கோவில் நிர்வாகம் ஏராளமான பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

பக்தர்களால் முட்டி மோதும் கோவில்கள் உள்ள இதே நாட்டில்தான், ஒரு நாளைக்கு நூறுபேர்கூட எட்டிப்பார்க்காத கோவில்களும் உள்ளன. பெரும் காணிக்கை காணாத அந்த கோவில்களை, ஏழைகளும் சீண்டுவதில்லை. அங்குப்போய் வேண்டுவதுமில்லை.

நடிகர் சிவகுமார் பேசியது, என்ன? ‘’பெரிய பணக்காரன் ஒருவன்,திருப்பதியில் முன்நாள் ரூம் போட்டு சின்னவீட்டோடு தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு குளிக்காமல் கூட தரிசனத்துக்குப்  போகிறான். அவனுக்கு திருமலை கோவிலில் ராஜமரியாதை செலுத்துகிறார்கள். ஆனால் விரதமிருந்து பாதயாத்திரை செல்லும் சாமான்ய பக்தனை இரண்டு நாள் காக்கவைத்து அதன் பிறகே தரிசனம் காட்டுகிறார்கள், ஏன் இந்த பாகுபாடு’’ என்பதே

அப்புறம் முக்கியமான விஷயம், சாமி கும்பிடுவது என்பதும் கோவிலை மதிப்பது என்பதும் அவனவன் நம்பிக்கையையும் மனசாட்சியையும் பொறுத்தது.

அந்த விஜபி உல்லாசமாக இருந்துவிட்டுக் குளிக்காமல் போனதை சிவகுமார் எப்படிப் பார்த்தார் என்பது நமக்குத் தெரியாது. தப்பு பண்ணுவது என முடிவெடுக்கிறவன் மேல் திருப்பதிக்கே போய் ரூம் போட்டு காரியத்தைச் செய்யலாம். எவன் புலனாய்வு செய்து தடுக்கமுடியும்? அதைத் தடுக்கிற சக்தி, அவனுடன் செல்பவளுக்கு மட்டுமே உண்டு.

இதே திருமலையில் தரிசனத்துக்காகச் சென்று ரூம் எடுத்துத் தங்கும் தம்பதியர்கூட, அங்கே தாம்பத்யம் வைத்துக்கொள்ளத் தயங்குவார்கள். ஏனெனில் அந்த அறைகளைக்கூட அவர்கள் பெருமாள் கோவிலின் அம்சமாகத்தான் பார்க்கிறார்கள். எனவே, கோவிலுக்கு வருகிறவன் மனநிலை என்பது அவனவன் சுய ஒழுக்கத்தைப் பொறுத்தது. இதில் கோவில் நிர்வாகம் ஒன்றும் செய்துவிடமுடியாது

இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், ஏழையோ, பணக்காரனோ பக்தியோடு வேண்டிக்கொள்ளும் அத்தனை பேருக்கும் அவர்கள் நம்பும் தெய்வம் அருள் புரிந்துவிடுவதில்லை. கோவிலில் முதல் மரியாதை பெற்று வாரிவாரி கொடுத்தவனும் பின்னாளில் வாயில் அடித்துக்கொண்டு அழும்படித்தான் வைக்கிறது அவன் தெய்வம்…

வேண்டுதல் பலித்தவன் தெய்வம் கைவிடவில்லை என்கிறான். பலிக்காதவன், நம்ம தலையெழுத்து அவ்வளவுதான் என்று நொந்து கொள்கிறான், பலிக்காத இன்னொருவன், கடவுளைக் கண்டபடி சபிக்கிறான்.

இவ்வளவு அமளிதுமளிக்கு மத்தியில் தெய்வம் அது பாட்டுக்கு அது இருக்குமிடத்தில் இருந்தபடி பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

கோவில் என்பது, நமது மனசாட்சியே கடவுளாக அமரும் ஒரு இடம். எவனும் கோவிலுக்குள் கர்வத்தோடு சாமி கும்பிடுவதில்லை. வழிபாடு முடித்துவிட்டு அழுதபடியேயும் வருவதில்லை

நம் அகம்பாவங்களைக் கழட்டிவைத்துவிட்டு சரணாகதி அடைந்து செய்த தவறுகளின் வாக்குமூலம், வேண்டுதல் போன்றவற்றை நடத்திவிட்டு, இனி எல்லாம் நடக்கும் என நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டிக்கொண்டு புத்துணர்ச்சியோடு வெளியே வரும் ஒரு இடம்தான் கோவில் எப்பேர்பட்டவனுக்கும் இது பொருந்தும்..

நடிகர் சிவக்குமார் பேசியதில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாததும் உண்டு.. பேசுகிறபோது அடிச்சிவிடுவது என்று சொல்வார்களே, அந்த மிகைத்தன்மையும் உண்டு.

நம்பிக்கை வைப்பவனுக்குக் கடவுள், நம்பிக்கை இல்லாதவனுக்கு வெறும் கல்.

எந்த சர்ச்சையை வைத்துப் பிழைப்பு நடத்தலாம் என சதா சர்வகாலமும் நெகட்டிவ் சிந்தனை தாறுமாறாய் அதிகரித்திருக்கும் இந்த காலத்தில், இதுபோன்ற சப்பை மேட்டருக்கெல்லாம், திருப்பதி தேவஸ்தானம் இறங்கிவருவது அதன் தகுதிக்கு அழகல்ல.

விமர்சனங்களை இப்படியே விடுவது நல்லதல்ல என்று ஒரு தரப்பு மார்தட்டும். இன்னொரு தரப்போ, விமர்ச்சிக்கறவன் மேலேயெல்லாம் நடவடிக்கை எடுப்பீயான்னு கேட்டு அது இன்னும் கேவலமா பேச ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் முடிவு காண முடியாது.

போகும் வழியில் அசிங்கம் தென்பட்டால் அதன்மேல் கால்கள் படாமல் ஒதுங்கி போய்க் கொண்டே இருக்கவேண்டும்.

 – ஏழுமலை வெங்கடேசன்

More articles

Latest article