சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

ரஜினியின் செயல்பாடுகள் எப்போதுமே விறுவிறுப்பாகவும் வேகமாகவும் இருக்கும்..அவரின் பழக்க வழக்கங்களை அவரே கழட்டிவிடுவதிலும் அவ்வளவு வேகம் இருக்கும் என்பது இங்கே முக்கியமான விஷயம்

1980களின் துவக்கத்தில் திரையில் ஸ்டைல் மன்னனாக இருந்தபோதும் திரைக்கு அப்பால் பக்தி மார்க்கத்தில் எங்கும் ராகவேந்தர் எதிலும் ராகவேந்தர் என்றார்..அவரின் 100வது படமே ராகவேந்தராதான். ரசிகர்களும் ராகவேந்திராய நமஹ என்றார்கள்..

1990களின் மத்தியில் அருணாச்சலேஸ்வரரின் பக்தரானார்.. மந்த்ராலயம் போன வண்டி திருவண்ணாமலைக்கு டர்ன் அடித்தது. அதான்டா இதான்டா அருணாச்சலாம் நான்தான்டா என்று அருணாச்சலம் படத்தை எடுத்து பாடினார்.. ரசிகர்கள் ருத்திராட்ச கொட்டையோடு கொட்டகைகளில் விசில் அடித்தனர்.

2000-களின் துவக்கத்தில் அருணாச்சலேஸ்வரர் விடைபெற்று பக்தி ஜம்ப் ஆகி இமயமலை பாபா ஒடிவந்தார்.. ருத்ராட்ச கொட்டைபோய் விரல் முத்திரை வந்தது.. வழக்கம்போல் பக்தி பிராண்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை, திரைக்கதையை அவரே எழுதி பாபா பெயரிலும் ஒரு படத்தை கொடுத்தார்.

அதென்னமோ தெரியவில்லை. ரஜினி அவர் நேசித்த மகான்கள், கடவுள் பெயரில் எடுத்து ஸ்ரீ ராகவேந்திரர், அருணாச்சலம், பாபா படங்களில் ஒன்றுகூட சூப்பர்ஸ்டாரின் ஹிட் வரிசையில் இடம் பிடிக்கவேயில்லை.

அதனால் சினிமாவில் ஆன்மீகமே வேண்டாம் என்று சந்திரமுகி, எந்திரன், காலா என மந்திரஜாலம், விஞ்ஞானம் தாதாயிசம் என போய்விட்டார் ரஜினி.

வெள்ளித்திரையில் வெற்றியைத்தராத ஆன்மீகத்தைதான் இப்போது அரசியலோடு போட்டு ஒன்றாக கட்ட முயற்சிக்கிறார்.

ஆன்மீகத்தில் மட்டும் அடிக்கடி மாறியவரல்ல ரஜினி, அரசியல் விவகாரங்களிலும் அடிக்கடி மாற்றிக்கொண்டவர்தான்.. அடி மனதில் ஒரே விஷயத்தில் பிடிப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்..

கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால், ரஜினியிடமும் எந்த போராட்ட குணமும் உண்மையாய், நிரந்தரமாய் இருந்ததில்லை.. அந்தந்த நேரத்தில் கொஞ்ச நேரம் மட்டும் சூடாக இருக்கும் ஃபாஸ்ட் புட் ரகமே.. அதிலும் மக்கள் நலன் என்று பார்த்தால் சட்டியில் கையை விட்டு துழாவித்தான் பார்க்கவேண்டும்..

1991ஆம் ஆண்டு தொடங்கிய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கும்பகோணம் மகாமக குள பலிகள், வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம், சந்திரலேகா மேல் ஆசிட் வீச்சு..வழக்கறிஞர்கள் மேல் தாக்குதல் என நிறைய பரபரப்பான விஷயங்கள்…

ஆனால் ரஜினி முதன்முதலாக வாயை திறந்தது, 1995 பாட்சா பட விழாவில்..  தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என்று..!  குண்டு வீசப்பட்டது, ரஜினியை வைத்து தளபதி படம் எடுத்த மணிரத்னம் என்ற சினிமா டைரக்டர் வீட்டில்.

இது மக்கள் பிரச்சினையா? சரி. வேண்டாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றே வைத்துக்கொள்வோம்..

முதலமைச்சர் ஜெயலலிதாவை ரஜினி சீண்டியது இன்னொரு விவகாரத்திலும். அது நடிகர் திலகத்திற்கு செவாலியே விருது கிடைத்து நடந்த பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, சிவாஜிக்கு உரிய கௌரவம் செய்யப்பட வில்லை என்று குத்திக்காட்டியது..

மேலே சொன்ன இரண்டுமே 100 சதவீதம் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை அல்ல.. அவர் தொழில் சார்ந்தோருக்கு ஆதரவான போர்க்குரல்.. இதை நாம் குறை சொல்லவில்லை..

சினிமா துறையினருக்காக பதறும் ரஜினிக்கு மக்கள் பிரச்சினையிலும் கோபம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.. வெறும் தொழில்முறை நடிகர் என்ற அளவில் போயிருந்தால் நாம் இதையெல்லாம் இப்போது சொல்லப்போவதில்லை..

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று அரசியல் ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்தது 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது., அதற்கப்புறம் அவருக்கு அரசியல் பார்வை மறந்துபோயிற்று..

2004 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிக்கு திடீரென்று கோபம் வந்து அரசியல் பார்வை பார்க்க ஆரம்பித்தார்..காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், மீனவர்கள் போன்ற நிரந்தர பிரச்சினைகளுக்கோ, அல்லது மக்களை பாதித்த நேரடி பிரச்சினைளுக்கோ கோதாவில் இறங்கினார் என்றால் அதுதான் இல்லை..

பாபா படத்தில் ரஜினி புகைபிடிக்கும் காட்சிகளை தாறுமாறாய் வைத்து இளைஞர்களை கெடுக்கிறார் என்று பாமக கடுமையாக கண்டித்தது.. பாபா படப்பெட்டியே ஒரு தியேட்டரில் இருந்து தூக்கிச்செல்லப்பட்டது..இதனால் எழுந்த மோதலில் ரஜினி கடுப்பானார்.

யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியவர், பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் அதை தோற்கடியுங்கள் என்று கூவினார்..1996ல் அரசியல் வாய்ஸ் அப்படியே மீண்டும் எதிரொலிக்கும் என்று நினைத்தார்..

காரணம், 1991-1996 காலகட்ட ஜெயலலிதா ஆட்சியின் அராஜகத்தால் அதிர்ந்துபோன தமிழக மக்கள் அவரை தேர்தலில் மண்ணைக்கவ்வ வைக்க எப்போதோ தயாராகிவிட்டிருந்த நேரத்தில்தான், தாம் கொடுத்த வாய்ஸ்சால் மட்டுமே ஆட்சிமாற்றம் வந்தது என ரஜினி முற்றிலும் தப்புக்கணக்கு போட்டு நினைத்துகொண்டதே

ஆம் அது தப்புக்கணக்கு என ரஜினிக்கே புரியும்படி, அந்த தேர்தலில் அவர் வீழ்த்தச்சொன்ன ஆறு தொகுதிகளிலுமே பாமக அமோகமாக வெற்றிவாகை சூடியது..

அத்தோடு அரசியல் வாஸ்சை போட்டுவிட்டு ஓடிப்போன ரஜினி, அதன்பிறகு எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நண்பனாக, நல்லவனாக நடந்துகொண்டார்.,

காவிரி பிரச்சினையில் திரையுலகமே ஒன்று திரண்டுபோய் நெய்வேலிக்கு சென்று கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று போராடியபோது அதில் பங்கேற்காமல், தனியாக உண்ணாவிரதம் என கச்சேரி நடத்தினார்..

அங்கே தவிர்க்கமுடியாமல் கர்நாடகத்தை விமர்சிக்க, குசேலன் படம் கர்நாடகாவில் ரிலீசாகப்பெரும்பாடுபட்டது. அதற்காக மறுபடியும் கர்நாடகா மக்களிடம் ரஜினி டியூனை மாற்றிப்பாடிய வீரத்தையெல்லாம் விவரிக்க இங்கே நேரம்போதாது..

கருணாநிதி, மூப்பனாரை முன்னே நிறுத்தி ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் வாய்ஸ் கொடுத்த அதே ரஜினி, ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என தீர்ப்பாகி பெங்களுர் சிறையில் தண்டனை கைதியாக இருந்து ஜாமீனில் வெளியே வந்தபோது முதல் ஆளாய் அவருக்கு கடிதம் எழுதினார்.. ஊழலை ஒழிக்க ரஜினி பாடுபட்ட அருமையான தருணம் அது..

தமிழக மக்கள் எவ்வளோ நெருக்கடிள் சந்தித்தபோதும் அவர்களுக்காக ரஜினி என்றைக்காவது உண்மையாக குரல் கொடுத்திருக்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்லலாம்..

2015 சென்னை வெள்ளத்தின்போது, மாநகரமே கதறியபோதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பல நாட்களுக்கு மக்கள்முன் வரவேயில்லை..நான் கொடுத்த வரிப்பணமெல்லாம் எங்கே போனது என நடிகர் கமல்கூட பொங்கியெழுந்தார். ஆனால் ரஜினி வாயே திறக்கவில்லை..

அள்ளிவிடுவதில் ரஜினிக்கு நிகராக யாரையுமே பார்க்கமுடியாது. நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று சொன்னார்.. உண்மையிலேயே அக்கறை இருந்தால் ஒரு கோடியை தந்துவிட்டு எங்கே திட்டம் என அரசை நாள்தோறும் உலுக்கியிருக்கலாம்..ஆனால் அதை அவர் செய்யவேயில்லை. நீங்கள் கூட உங்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் புல்லட் டிரெயின்விட பத்து கோடி தருகிறேன் என்று அறிவித்துவிட்டுபோகலாம்..எவன் அந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்வரப்போகிறான், நீங்கள் சொன்னபடி பணத்தை கொடுக்க.?

அரசியலுக்கு வருவேன் என்கிற ரீதியில் 1996ல் குரல் கொடுத்தார் ரஜனி..அவரது ரசிகர்களும் வாயை பிளந்துகொண்டு எதிர்பார்த்தார்கள், 96ல் பிறந்த குழந்தை 2014ல் பதினெட்டு வயது வந்து நாடாளுமன்ற தேர்தலிலும், 20 வயதாகி 2016 சட்டசபை தேர்தலிலும் ஓட்டே போட்டுவிட்டது இன்னமும் அவர் அதிகாரபூர்வமாக அரசியலுக்கு வரவில்லை.

என்மேல் அன்பு காட்டும் ரசிகர்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் ரஜினி, தனது முதல் மகளின் திருமணத்தின்போது விருந்து வைக்கப்போவதாக சொன்னார்.. இப்போது அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கே பதினோறு வயது ஆகிறது.. விருந்து வைத்தபாடில்லை..

ஆனாலும் சமீபத்தில் மதுரை ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தபோது உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை..ஆனால் மண்டபத்தில் அதற்கு அனுமதி கிடையாது என்று மீண்டும் விருந்து காமெடி நடத்தினார், ராகவேந்திரா மண்டபத்தின் ஓனரே அவர்தான் என்பதையும் மறந்து..

போகட்டும் நேரடியாக மேட்டருக்கு வருவோம்.. இப்போது கொள்கை, கட்சி, கொடி, சின்னம் பற்றி எதையும் சொல்லாமல் வெறும் ஆன்மிக அரசியல் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். உண்மையான, நேர்மையான நியாயமான, சாதி மத பேதமற்ற அரசியலே ஆன்மீக அரசியல். அறவழியில் நடப்பதே ஆன்மீக அரசியல் என்று புது விளக்கமும் கொடுத்திருக்கிறார்.. இத்தோடு நிற்கவில்லை.. அரசியல் வேறு ஆன்மா வேறு என்றும் மேலே போகிறார்.

தெருவில் இறங்கிப்போராட அதற்கென தனியே கூட்டம் இருக்கிறது.. அது நமக்கு வேண்டாம் என்கிறார்..இன்னொரு பக்கம் பெரிய பெரிய புரட்சிகளெல்லாம் தமிழகத்தில் இருந்துதான் துவங்கியது என்கிறார்.. தெருவில் இறங்கி போராடாமல் அந்த புரட்சியெல்லாம் படுக்கை அறையிலேயே தொடங்கி நடந்ததா என்றெல்லாம் அவரிடம் நாம் கொச்சையாக கேட்டுவிடக்கூடாது…

அரசியல் என்பது களத்தில் இறங்கி மக்களின் நலனுக்காக பாடுபடுவது.. அது மாட்டுச்சாணம் மாதிரி,, அடுப்பெரிக்க, வீட்டை மொழுக, வாசலில் தெளிக்க என பலதுக்கும் பயன்படும்..ஆன்மீகம் என்பது கற்பூரம் மாதிரி.. கொளுத்தி வழிபடலாம் அவ்வளவே..

ஆன்மீகம் என்பது, தன்னை அமைதி மார்க்கத்தில் வழிநடத்திக்கொள்வது.. அடுத்தவர்களுக்கு அறிவுரை மட்டுமே ஆன்மீகத்தில் சொல்லமுடியும்.

சொல்லுகிற இடத்தில் இருக்கிற ஆன்மீகத்தை செயல்பட்டே ஆகவேண்டிய அரசியலோடு கட்டிபோடும் புது வித்தையை பேச ஆரம்பித்திருக்கிறார்..  ரஜினி காட்டுவது வித்தைதானே… அதென்ன நிஜமா,? அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட..

நிஜமாக அரசியலுக்கு அவர் வந்தால், அப்படி வரும்போது பார்த்துக்கொள்வோம்..

துபாயில் பார்வையாளருக்கே பல லட்சம் கட்டணம் வைத்து பட இசை வெளியீட்டு விழாவை நடத்திய ரஜினி, அவரின் இரண்டு படங்களின் வெளியீட்டை செவ்வாய் கிரகத்திலும் நடத்துவது பற்றிய வியாபார சிந்தனையில் இருக்கட்டும்.. நாம் ஓகி புயலால் காணாமல் போன நூற்றுக்கணக்கான மீனவர்களை தேடிப்போவோம்..