திருவண்ணாமலை

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திகழ்கிறது. தினமும் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

இதில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். எனவே பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். அதிலும் குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் (புதன்கிழமை) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. எனவே திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து (22.04.2024) அன்று 527 பேருந்துகளும் மற்றும் (23.04.2024) அன்று 628 பேருந்துகளும், மேலும் சென்னை மாதவரத்திலிருந்து (22.04.2024) அன்று 30 பேருந்துகளும் (23.04.2024) அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு (22.04.2024) அன்று 910 பேருந்துகளும் (23.04.2024) அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு (22.04.2024) மற்றும் (23.04.2024) ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு  www.tnstc.in மற்றும் Mobile  App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.