அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் இலவசப் பயணம் : தெற்கு ரயில்வே புகார்

Must read

சென்னை

யணச் சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் ரயிலில் பயணம் செய்வதாக தெற்கு ரயில்வே புகார் அளித்துள்ளது.

தமிழக காவல்துறையினர் அடையாள அட்டையை மட்டும் காட்டி விட்டு டிக்கட் உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும் இன்றி ரயில்களில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது,.   இவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகள் மற்றும் முதல் வகுப்புக்களில் பயணம் செய்வதால் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.  பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தெற்கு ரயில் தமிழகக் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு ஒரு கடிதம்  அனுப்பி உள்ளது.  அதில், “தமிழக காவலர்கள் ரயில்களில் அடையாள அட்டையைக் காண்பித்துப் பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அதிகப்படியான புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது.  இவர்கள் விரைவுவண்டி உட்படப் பல ரயில்களில்  டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையைக் காண்பித்து ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கையில் அமர்ந்து முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு பயணம் செய்யும் காவலர்களிடம் டிக்கெட் பரிசோதகர் பயணச்சீட்டு ஆவணங்களைக் கேட்டால் அவர்கள் ஆவணங்களைக் காட்டாமல் தங்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்துத் தொடர்ந்து அதே ரயிலில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  ஆகவே பயணச்சீட்டு குறித்த ஆவணங்களை உடனடியாக காவலர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இவ்வாறு பயணிக்கும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்று கூறப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இதுகுறித்து , ”ரயில் பயணத்துக்கான இலவச டிக்கட்டுகள் காவல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு வருவதில்லை.  மாறாக அவை குறைவான எண்ணிக்கையில் வருகின்றன.  எனவே பணி தொடர்பாகச் செல்லும் காவல்துறையினர் இதுபோன்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article