சான்ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதி முழுவதும், வெள்ளிக்கிழமை காலையில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ரிட்ஜ் கிரெஸ்ட்டின் வடகிழக்குப் பகுதியில் அந்த அதிர்வு 5.4 என்ற அளவில் உணரப்பட்டது என்று அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.07 மணியளவில் நிலஅதிர்வு பதிவானது. வியாழன்று ஏற்பட்ட வலிமையான 6.4 என்ற அளவிலான அதிர்வையடுத்து, வெள்ளிக்கிழமையன்று மொத்தம் 200 அதிர்வுகளுக்கு மேல் உணரப்பட்டது.

5.4 அளவுள்ள அதிர்வு, சியர்லஸ் பள்ளத்தாக்கிலிருந்து மேற்கே 10 மைல்கள் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அதேசமயம், சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

வியாழனன்று, லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து 150 மைல்கள் தொலைவில், வடக்கு தி‍சையில், ரிட்ஜ்கிரெஸ்ட் அருகே மையம் கொண்ட மிக வலிமைவாய்ந்த நிலஅதிர்வு, கடந்த 20 ஆண்டுகளில், தெற்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகளிலேயே பெரியதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.