புனே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில், 7 விக்க‍ெட்டுகளைப் பறிகொடுத்து 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

தற்போது நான்காம் நாள் ஆட்டம் நடந்து வருவதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைவது உறுதியாகியுள்ளது.

இந்திய அணி 4வது நாளில் சில ஓவர்கள் பேட்டிங்க செய்து, விரைவாக ரன்களை அடித்து, நான்காம் நாளின் உணவு இடைவேளைக்குப் பிறகு 450 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து, தென்னாப்பிரிக்காவ‍ை பேட்டிங் செய்ய அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலியோ வேறுமாதிரி யோசித்து, எதிரணிக்கு ஃபாலோ ஆன் வழங்கிவிட்டார்.

இதனால் நான்காம் நாளில் முதல் ஓவரிலிருந்தே பேட்டிங் செய்யத் துவங்கியது தென்னாப்பிரிக்க அணி. துவக்க வீரர் மார்க்ரமை டக் அவுட்டாக்கினார் இஷாந்த் ஷர்மா. அரைசதத்தை நோக்கி முன்னேறிய இன்னொரு துவக்க வீரர் டீன் எல்கரை, 48 ரன்களுக்கு அவுட்டாக்கினார் அஸ்வின்.

புருயினை 8 ரன்களுக்கு உமேஷ் யாதவ் வெளியே அனுப்பினார். அந்தப் பந்தை விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டூ பிளசிஸை 5 ரன்களுக்கே நடையைக் கட் வைத்தார் அஸ்வின். சற்று நிலைத்து நின்று ஆடி 38 ரன்கள் வரை அடித்த பவுமாவை ஜடேஜா தனது ஓவரின் இரண்டாவது பந்திலேயே காலி செய்தார்.

முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதமடித்த விக்கெட் கீப்பர் குவின்டன் டீ காக் எடுத்ததும் 5 ரன்கள்தான். இவரை காலிசெய்ததும் ஜடேஜாதான்.
நீண்டநேரம் விக்கெட் கிடைக்காமல் இருந்த ஷமி, முத்துச்சாமியை 9 ரன்களுக்கு திருப்பியனுப்பினார்.

தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது தென்னாப்பிரிக்கா. ஆனால், முதல் இன்னிங்ஸைப் போலவே கடைசி கட்டத்தில் பவுலர்கள் இணைந்து பொறுமையையும் நேரத்தையும் மீண்டும் சோதிப்பார்களா? என தெரியவில்லை.

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, ஷமி மற்றும் உம‍ேஷ் யாதவ் ஆகிய வேகங்களுக்கு தலா 1 விக்கெட்டும் இப்போது வரை கிடைத்துள்ளன.