மும்பை: உலக யூத் செஸ் தொடரில், தமிழ்நாட்டின் பிரக்னநந்தா 18 வயதுக்குட்பட்டோர் ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற உலக யூத் செஸ் தொடரில், 18 வயதுக்குட்பட்டோருக்கான ஓபன் பிரிவில், தமிழ்நாட்டின் 14 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்னநந்தா களமிறங்கினார்.

இவர் 10வது சுற்றில் 7 வெற்றி, 3 டிரா என்று மொத்தமாக 8.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். எனவே, 11வது சுற்றில் இவர் வெல்லவில்லை என்றாலும், டிரா செய்தாலேப் போதும் என்ற நிலை ஏற்பட்டது.

11வது சுற்றும் வந்தது. அச்சுற்றில் ஜெர்மனியின் வேலன்டினை சந்தித்தார். இப்போட்டியில் டிரா செய்து மொத்தம் 9.0 புள்ளிகள் பெற்றார்.

ஆர்மேனிய நாட்டின் சர்க்ஸ்யன் மற்றும் இந்தியாவின் அர்ஜுன் கல்யாண் ஆகியோர் மோதிய போட்டி டிரா ஆனால் இவர் எளிதாக சாம்பியன் ஆகலாம் என்ற நிலை இருந்தது. எதிர்பார்த்ததைப்போலவே அப்போட்டியும் டிரா ஆனதால், 14 வயது தமிழக வீரர் யூத் செஸ் தொடரில் சாம்பியன் ஆனார்.

மேலும், 14 வயது ஓபன் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீஹரி மற்றும் ஸ்ரீஷ்வன் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். 14 வயது பெண்கள் ஓபன் பிரிவில் இந்தியாவின் திவ்யா மற்றும் ரக்சிதா தேவி ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் கைப்பற்றினர்.