தேனி:
அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜக சேர்த்து கொண்டதுதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியின் சில பெருந்தலைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

அப்படியிருந்தும் அத்தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிமுகவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை’ என்று அதிமுகவின் தீவிர அபிமானிகள் கேட்கும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துவிட்டன. எனவே கட்சியை உடனே ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் ஒருசாரார் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அவர்கள் இத்துடன் மட்டும் நின்றால் பரவாயில்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டு்ம் என்பதும் அவர்களின்பிரதான விருப்பமாக உள்ளதாம். தேனியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், தேனி மாவட்ட அதிமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எந்தவித நிபந்தனையுமின்றி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்சி நிர்வாகிகளின் இந்த முக்கிய கோரிக்கையை கவனத்துடன் கேட்டு கொண்ட ஓபிஎஸ், இதுதொடர்பாக தேனி மாவட்ட அதிமுக சார்பாக வரும் 5 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பும்படி ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.