சென்னை

ள்ளலார் ராமலிங்க அடிகளுக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த 1823 ஆம் வருடம் பிறந்த ராமலிங்க அடிகளார் திருவருட் பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ஆன்மீகவாதி ஆவார்.    சத்திய ஞான சபையை நிறுவிய இவர் கடவுள் ஒருவரே என்னும்  கருத்தை வலியுறுத்தியவர் ஆவார். வள்ளலார் சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை என்றும் மாற்றிக் கொள்ளாதவர் ஆவார்.

கடந்த 1867 ஆம் வருடம் இவர் வடலூரில் தருமசாலையைத் தொடங்கி அங்கு வருவோருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.  கடந்த 1874 ஆம் வருடம் அவரது மறைவுக்குப் பிறகும் தற்போது வரை அந்தப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசு தருமசாலைக்கான உணவுப் பொருட்களைக் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.   இவருடைய நினைவு இல்லம் சென்னை தங்கசாலையில் உள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் வள்ளலாருக்கு மணி மண்டபம் அமைக்கப் போவதாக அறிவித்தது.  தேர்தலில் வென்ற திமுக தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.  வள்ளலார் மணி மண்டபம் குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லத்தை இன்று(3.10.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல வள்ளலாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதைப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துக் கொண்டோம்.” எனப் பதிந்துள்ளார்.