டெல்லி: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின்  தேர்தல் செலவு கணக்கை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், தேசிய கட்சியான பாஜகவின் செலவு கணக்கை மட்டும் வெளியிடாமல் முடக்கி உள்ளது. இது மற்ற கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதின. ஆனால், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவையும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான தி.மு.க., அண்ணா தி.மு.க. ஆகியவையும் தங்கள் தேர்தல் பிரச்சார செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன. அதன் விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி,

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி உள்ள தி.மு.க. தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பிரச்சாரத்துக்கு ரூ.114 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 525 செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

 அண்ணா தி.மு.க. 2 மாநிலங்களிலும் ரூ.57 கோடியே 33 லட்சத்து 86 ஆயிரத்து 773 செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தல்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.84 கோடியே 93 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி ரூ.13 கோடியே 19 லட்சம் செலவிட்டதாக கூறியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் ரூ.154 கோடியே 28 லட்சம் செலவிட்டுள்ளது.

ஆனால், மற்றொரு தேசிய கட்சியான பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரச்சார செலவு, அதில் இடம்பெறவில்லை.

அரசியல் கட்சிகளின் இந்த செலவு விவரங்களை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் தேர்தல் செலவு கணக்கை மட்டும் வெளியிடாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.