டில்லி

விரைவில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு மத்திய அரசு மின் வாகனங்கள் பயன்பாட்டுக்கு அதிக முயற்சிகள் செய்து வருகின்றது.  இதனால் தற்போது மின் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை ஊக்குவிக்க மத்திய அரசு ஃபேம் II என்னும் திட்டத்தின் மூலம் மானியம் வழங்கி வருகிறது.   இந்த மின் வாகனங்கள் விரைவில் பொதுப் போக்குவரத்திலும் முழுமையாகப் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதே வேளையில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதால் சிக்கலாக உள்ளது.  இதையொட்டி நாடெங்கும் பரவலாக சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் மத்திய அரசு நிதி ஆயோக் மும்முரம் காட்டி வருகிறது.  அதில் ஒன்றாக நாடெங்கும் உள்ள ரயில் நிலையங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிதி ஆயோக் ரயில்வே அமைச்சகத்துக்கு, “ரயில் நிலையங்கள் போக்குவரத்துத் துறையில் தனி இடம் வகிக்கின்றன..  எனவே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டால் அத் மக்களின் பயன்பாட்டுக்கு வசதியானதாக இருக்கும். ” எனத் தெரியப்படுத்தி உள்ளது.  விரைவில் நிதி ஆயோக் ரயில்நிலையங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கலாம் எனக் கூறப்படுகிறது.