டெல்லி: சோனியாகாந்திக்கு கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பான பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடலநலப் பாதிப்பு காரணமாக கடந்த 12ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்புக்கு பிந்தைய  பூஞ்சை தொற்று பாதிப்பு  இருப்பதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தரப்பில்  இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது மூக்கில் இருந்து அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த ஜூன் 12 அன்று புது டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

சோனியா காந்தியின் சுவாசக்குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பிற கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தொடர்ந்து தீவீர கண்காணிப்பில் சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.