டில்லி

ஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவஜோத் சிங் சித்து தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.  அவருக்கும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.   முதல்வரை எதிர்த்து சித்து வெளிப்படையாக பலமுறை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதையொட்டி சித்துவை அமரிந்தர் சிங் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்

அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டதால் தலைமை மிகவும் கவலை அடைந்தது.   பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி இரு பிரிவாகப் பிரியலாம் என அச்சம் ஏற்பட்டது.    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் அமரிந்தர் சிங், நவஜோத் சிங் சித்து ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்தனர்.

அப்போது இருவரையும் சமாதானம் செய்த சோனியா காந்தி சாதுரியமாக ஒரு முடிவு எடுத்துள்ளார்.  அதன்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை அவர் நியமித்துள்ளார்.  மேலும் சங்கல் சிங் கிஸியான், சுக்விந்தர் சிங் டானி, பவன் கோயல், குல்ஜித் சிங் நாக்ரா ஆகிய நால்வரும் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.