சென்னை:
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதாக தமிழக
பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்
குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குமுன் வடகாடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி,
வாணக்கன் காடு,நெடுவாசல் ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள்
சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில், கடந்த பிப்ரவரி 15 ம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனும்
இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் விவசாயம் நிறைந்த, டெல்டா பகுதியாக உள்ள இப்பகுதியில்
இயற்கை எரிவாயு எடுத்தால் பாலைவனமாக மாறும். இங்கு வசிப்போர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை
உணர்ந்த அப்பகுதி மக்கள் கடந்த 16 ம் தேதி முதல் நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றிலும்
உள்ள ஊர்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் நெடுவாசல் போராட்டத்தை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதாக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்
இன்று குற்றஞ்சாட்டினார். ” இந்தத் திட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்றால் மத்திய அரசு திரும்பபெறும். சில அரசியல்
தலைவர்கள் ஆதாயத்துக்காக நெடுவாசல் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்.
மக்களை அச்சுறுத்துகின்றனர்” என்றார்.
இதேபோல் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ” மக்களுக்கு இத்திட்டம் குறித்த சந்தேகத்தை விளக்கும் நிபுணர்களை சில குழுக்கள் மக்களை சந்திக்கவிடாமல் தடுக்கின்றனர் ” என்று குற்றச்சாட்டினார்.