சென்னை,

மிழகம் முழுவதும் 20 மாவட்டங்கள் வழியாக புதிய எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் விவசாயம் அடியோடு அழியும் என்றும், இந்த திட்டத்தை எதிர்த்து பாமக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்று பாமக தலைவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதைத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து 13 மாவட்டங்கள் வழியாக புதிய இயற்கை எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4 வழித்தடங்களில் இந்த எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை எண்ணூரிலிருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினத்துக்கு 325 கி.மீ.,

நாகை முதல் தூத்துக்குடிக்கு 318 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கு 242 கி.மீ,

திருவள்ளூரிலிருந்து பெங்களூருக்கு 290 கி.மீ

என மொத்தம் 1175 கி.மீ தொலைவுக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இவற்றில் 981 கி.மீ. நீள குழாய் பாதை தமிழகத்திலும், 111 கி.மீ. நீளப்பாதை ஆந்திரத்திலும், 83 கி.மீ நீளப்பாதை கர்நாடகத்திலும் அமையவுள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் வழியாக இந்த பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த பிரமாண்டத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் இந்த திட்டத்தின் பங்குதாரராக இருக்கும்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக சென்னை எண்ணூரில் இருந்து திருவள்ளூர் வழியாக பெங்களூருக்கு எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

இதனால், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உத்தேசித்துள்ள நிலங்கள் அனைத்தும் வளமான விளைநிலங்கள் ஆகும்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் இயற்கை எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்பட்டிருக் கும். இக்குழாய் பாதைகளில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்கவே நடுங்குகிறது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்; உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பதால் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் அல்லது விவசாயத்தை பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் இத்திட்டத்தால் முதற்கட்டமாக பாதிக்கப்படும் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.