டிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ்  இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

சமீபகாலமாகவே கருணாஸை சுற்றி சர்ச்சைக்குறிய செய்திகள் வட்டமடித்து வருகின்றன.  சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள், கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டபோது, கருணாஸ்தான்  நடனமாட நடிகைகளை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.

இதை மறுத்த கருணாஸ், இப்படி செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்தார்.

பிறகு, “நான் யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பேன். அது குறித்து கேட்க மக்களுக்கு உரிமை இல்லை” என்று கருணாஸ் பேசியதாக தகவல் வெளியானது. அதையும் கருணாஸ் மறுத்தார்.

அடுத்து, தனது திருவாடானை தொகுதிக்கு சென்ற அவர் மீது செருப்பு வீச்சு நடந்தது.

தவிர தீவிர சசிகலா ஆதரவாளராக இருந்த கருணாஸ் தற்போது குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவரில் எவர் பக்கம் அடைக்கலமாவது என்பதில்தான் இந்த குழப்பம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென கருணாஸ் சந்தித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது. ரஜினி மூலமாக, பாஜகவில் சேரப்போகிறார் என்பதும் அதில் ஒரு யூகம்.

சந்தித்தது ஏன் என்பதுகுறித்து அ.தி.மு.க  எம்.எல்.ஏ கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸிடம் இது குறித்தெல்லாம் கேட்கப்ட்டது. அவர், “ரஜினிகாந்தின் திரைவாழ்வில் முக்கியமான படம் பாட்ஷா. இந்தப் படம் டிஜிட்டல் முறையில நாளை வெளியாகிறது. அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்தித்தேன்” என்றார்.

மேலும் அவர், “ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த செய்திகள் பற்றி நாங்கள் பேசவில்லை. பொதுவாக என்னுடைய  அரசியல் மற்றும் திரைப்பட சூழ்நிலைகள் குறித்துப் பேசினேன். நான் எம்.எல்.ஏ ஆனவுடன் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அதனால் ரஜினியைச் சந்திக்க ஆசைப்பட்டேன். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் அவர் பல நல்ல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார்.

ரஜினி தற்போது ‘ரோபோ 2’ படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதுகுறித்துப் பேசினார். பொதுவாக ரஜினிகாந்த்தை எனக்குப் பிடிக்கும். ரஜினிக்கும் என்னைப் பிடிக்கும். மரியாதை, பாசம், அன்பு போன்றதுதான் இந்தச் சந்திப்பு” என்றார்.

தொகுதியில் கருணாஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, “நேற்றுகூட, தொகுதியில்தான் இருந்தேன். மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அவர்களுடன் சென்று சீமைக்கருவை மரங்களை வெட்டினேன். சிவராத்திரி அன்று ஒன்பது கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்” என்றார்.

சமீபகாலமாக அரசியல் விவகாரங்கள் குறித்து நடிகர் கமல் காரசாரமாக ட்விட் செய்வது பற்றி கேட்டபோது, அது குறித்த பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.

மேலும், தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கேட்பது சுயநல அரசியல் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.