மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் போதை பொருள் கடத்தல் மன்னான முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மற்றும் குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்கு பின்னணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக நபரும்,   சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது  தெரியவந்தது. இவர் திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த நிலையில், வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தில் செயலில் ஈடுபட்டு வந்ததும், சுமார் ரூ.2,000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. கடத்தல் சம்பவத்தில் தம்மை போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இநத் நிலையில்,  சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் பயணி ஒருவர் மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது  கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 30 கிலோ அளவிலான பல கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து,  போதைப்பொருள் கொண்டுவந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார்,  போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் சிலமன் பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இநத் போதை பொருளுக்கும் ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா,  போதை பொருள் எங்கிருந்து கிடைத்தது, யார் கொடுத்தார்கள், எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது என துருவி துருவி விசாரணை நடைபெற்று வருகிறது.