காஷ்மீர் எல்லையில் உறை பனியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நம் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர்.

பனி பொழிவு அதிகம் இருக்கும் காலங்களில் சராசரியாக மைனஸ் ஐந்து டிகிரி வரை கூட செல்லக்கூடும், அது போன்ற காலங்களில் கண்டைனர் போன்ற அமைப்புகளில் சென்று தங்கிக்கொள்ள இவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் படும் துயரை கண்டு அவர்களுக்கு உதவ எண்ணிய சோனம் வாங்-சுக் எனும் லடாக்-கை சேர்ந்த தன்னார்வலர் இவர்களுக்காக சோலார் கூடாரங்களை வடிவமைத்திருக்கிறார்.

சூரிய சக்தியை சேமித்து இயங்கக்கூடிய இந்த கூடாரத்தின் வெளியில் மைனஸ் 14 டிகிரி வெப்ப நிலை நிலவினாலும் இதன் உள் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ள இந்த கூடாரத்தின் எடை 30 கிலோ மட்டுமே, வீரர்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கு சுலபமாக சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனம் வாங்-சுக்

லடாக் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு முறை சாரா கல்வி மூலம் அவர்களை மேல்நிலை கல்விக்கு தகுதியுள்ளவர்களாக செய்து வரும் தன்னார்வலரான சோனம் வாங்-சுக்கின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்த கூடாரங்களை தயாரிக்க 5 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்று தெரிவித்துள்ள வாங்-சுக், இவை தற்போதுள்ள கண்டைனர்களை விட இரு மடங்கு அதிக இடவசதி கொண்டது, மேலும், கண்டைனர் விலையில் பாதி அளவு மட்டுமே செலவாகும் என்று கூறினார். கண்டைனர்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 9 லட்சம் முதல் 10 லட்சம் செலவு செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.