பாடகி வைக்கம் விஜயலட்சுமி பேட்டி –  பகுதி -1

வித்தியாசமான குரல் கொண்ட பாடகிகளை யாருக்குமே மறக்க முடியாது. பிறவியிலேயே பார்வை குறைபாடு ஏற்பட்டு, பார்வை இழந்து சொந்த முயற்சியால் காயத்ரி வீணை மீட்டி தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் பாடி மக்களை கவர்ந்தவர் வைக்கம் விஜயலெஷ்மி.

புதிய புதிய உலகை தேடிப்போகிறேன், சொப்பன சுந்தரி நான் தானே, காக்கா முட்ட காக்க முட்ட உட்பட பல பாடல்கள் வாயிலாக ரசிகர்கள் மனம் கவர்ந்த வைக்கம் விஜயலெஷ்மிக்கு மார்ச் 29.ம் தேதி திருமணம் நடத்த நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், இந்த  திருமணம் திடீரென நின்றுபோனது. அந்த வலியை மறக்க அவர் தொடர்ச்சி யாக ஐந்து மணி நேரம் காயத்ரி வீணையில் இசை அமைத்து  உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இப்போது  வருத்தமா இருக்கா?

இல்லை இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கேன். பெரிய ஒரு மன பாரம் குறைஞ்சது போலருக்கு.   (நிலவின் ஒளி போல விஜயலெஷ்மி சிரிக்கிறார். வைக்கம் உதயனாபுரம் உஷா நிலையம் வீட்டில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.  இறகுகளின் கனம் குறைந்த பறவைகளைப்போல அவர் பெருமூச்சு விடுகிறார்.)

“கல்யாணம் நிச்சயமானதுக்கப்புறம் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.  அதே வேளை எனது உயிருக்குயிரான  சங்கீதத்தை கைவிட வேண்டி இருக்குமோ? என்ற அச்சம் என் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. மனதின் குழப்பங்கள் எனது குரலை பாதித்தது. பாடமுடியாமல் தவித்தேன்.” முகத்தில் சிரிப்பு மறைந்தது.

விஜயலெஷ்மி காயத்ரி வீணையை கையில் எடுத்தார். தோழியின் கைபட்டதும் அதிலிருந்து சங்கீதம் பிறந்தது. காயத்திரி வீணையில் இருந்து ஹரிமுரளீரவம் பாடல் பிறந்தது.

சந்தோஷுடன் நிச்சயிக்கப்பட்டு கல்யாணம் நின்று போன வேதனையில் இருந்து அவர் காயத்ரி வீணையை இசைத்து மீண்டு வந்தார்.

சந்தோஷுடன் உள்ள திருமண முறிவை வெளிப்படுத்தியதும் விஜயலெஷ்மிதான். தன்னிச்சை யாக, தன்மானத்துடன் அந்த பாடகி எடுத்த முடிவை கேரளா பெருமையுடன் பாராட்டியது .

திருமண விஷயத்தில் என்னதான் நடந்தது?

திருமண நிச்சயதார்த்ததுக்கு முன் அவர் என்ன சொன்னாரோ அதற்கு எதிராக அவரது நடை முறைகள் தொடந்து தென்பட்டது.

அவருக்கு அப்பாவும், அம்மாவும்  கிடையாது. அதனால கல்யாணத்துக்கப்புறம் எங்க கூட இங்கே இருக்கணும்னு கேட்டுகிட்டோம். அவரும் சம்மதிச்சார்.

பத்திரிகையில் மெட்ரிமோனியல் பகுதியில் வந்த 600  கடிதங்களில் இருந்துதான் நான் இவரை தேர்வு செய்தேன்.  அவரது சகோதரிதான் என்கிட்டே முதலில் போனில் பேசினாங்க. நான் அவங்ககிட்டே வெளிப்படையா எங்க எதிர்பார்ப்பை சொன்னேன்.

“என்னுடன் வீட்டில் இருக்கணும். என்னோட சங்கீத கச்சேரிகள்.. அதற்கு தடை விதிக்கக்கூடாது. .என்னை இன்னும் பல உயரங்களுக்கு அழைத்துச்செல்லவேண்டும்” என்பதே எனது கோரிக்கை யாக இருந்தது.

முதலில் எல்லாத்தையும் சம்மதிச்சாரு.  நிச்சய தார்த்தம் முடிந்து சில நாட்களில் அவரது பழக்க வழக்கங்களில் சிலமாற்றம். போன் பண்ணும் போதே அதை என்னால்  உணர்ந்து கொள்ள முடிந்தது.

நான் அவங்க வீட்டில நிற்கணும்னு சொன்னாரு..அப்புறம் நான் பாட்டு டீச்சராக வேலைக்கு போகணும்னு சொன்னாரு. என்னை அச்சப்படுத்தும் விதத்தில் பேசினாரு. நான் அதெல்லாம் முடியாதுன்னு நான் சொன்னேன்.

’கண்ணு மட்டும்தானே இல்லை. காலும் கையும் நல்லாதானே இருக்கு..கண்களுக்கு காட்சி கிடைக்கும்னு நம்ம  ஒண்ணும் வேண்டாம் . மருந்து சாப்பிட்டா ஒண்ணும் கண்ணுக்கு காட்சி கிடைக்காது. அது தேவையில்லாதது!”ன்னு சொல்லவும் எனக்கு கோபம் தலைக்கேறியது.

அத்துடன் நான் சொன்னேன், ”நாம் கல்யாணம் பண்ணினா சரியாகாது. கல்யாணத்தை நிறுத்திடு வோம்னு.” நம்மை அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் ஒருத்தர் பேசுறாருன்னா அவங்ககூட பேசுறதை நிறுத்துறதுதானே நல்லது.  ஆரம்பத்திலேயேயே இப்படின்னா கல்யாணம் ஆச்சுன்னா என்னோட நிலை..?”

ஆனா, பல இளைய  தலைமுறை பெண்கள் திருமணம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் இப்படி திருமணம் வேண் டாம்னு  தைரியமா சொல்றவங்க ரொம்ப கம்மி விஜயலெஷ்மி?

என்னோட விஷயத்தைப்பொறுத்தவரை நான் ரொம்ப யோசிச்சு நானா எடுத்த முடிவு. என்னோட முடிவைக்கேட்டதும் அப்பாவும், அம்மாவும் உனக்கு வேண்டாம்னா  இந்த கல்யாணம் வேண்டாம் னுட்டாங்க…ஏன்னா எங்கிட்டே அவரு பேசுறதை அவங்களும் கேட்டுகிட்டுதானிருந்தாங்க..

எனக்கு பயமா இருக்குன்னு தோணிச்சுன்னா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொன்னாங்க.. அவங்க என்னை முழுமையா புரிஞ்சுகிட்டு, அட்ஜட்ஸ்ட் பண்ணிட்டு போன்னு சொல்லிக்காம, திருமணத்தை நிறுத்த முன்வந்தது மலையளவு சமாதானத்தை எனக்குத்தந்தது.

அப்படி ஒரு தீர்மானம் எடுத்தது தப்புன்னு உங்களுக்கு எப்போதாவது தோன்றியதா?

இல்லை. என் மனசு இப்போதான் சமாதானமா இருக்கு. காரணம் எனக்கு முன்னாடி கல்யாணத்தை நினைச்சு டென்ஷனாயிருந்துச்சு.  கடவுளே கல்யாணம் பண்ணினனும் என்னோட எல்லா திறமைகளும் என்னை விட்டு போயிடுமேன்னு தோணிச்சு. எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா?  வேண்டாம்னு சொன்னதும் சமாதானமாச்சு. அப்பாடா ஒழிஞ்சு போயிடுச்சுன்னு…

பத்திரிகையில பேட்டி கொடுத்தீங்க..?

அதுவும் நான் தான். நான்தான் பத்திரிகைகளுக்கு தகவல் தரச்சொன்னேன். அப்புறம் அப்பாவும் அம்மாவும் பேசினாங்க. இல்லைன்னா மார்ச் 29ம் தேதி கல்யாணம்னு நினைச்சுட்டு பத்திரிகை காரங்க வந்துடுவாங்க. அது இன்னும் சங்கடத்தை உருவாக்கும். அதனால் நாங்களே கல்யாணம் நின்னு போனதை தெரிவிச்சோம்.

உங்க பிரண்ட்ஸ் இந்த முடிவு எடுத்ததுக்கு  சப்போர்ட்டா இருந்தாங்களா?

எல்லோருமே என்னோட இந்த முடிவை வரவேற்கிறாங்க.  அவங்களுக்கு முதலிலேயே இந்த கல்யாண ஏற்பாடு பிடிக்கவே இல்லை. அவங்க மாமா, சொந்தக்காரங்க சேர்ந்துதான் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அவங்க சொல்லித்தான் இந்த திருமணத்துக்கு சம்மதிச்சதாவும் சொன்னாரு.

அப்படிதான் நான் ஒரு முறை அவர்கிட்டே கேட்டேன்,அவங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நீங்க சம்மதிப்பீங்களான்னு..சொந்தமா ஒரு முடிவுகூட எடுக்கத்தெரியாத உறவில் இருந்து விலகியது நல்லதுன்னே என்னோட பிரண்ட்ஸ்ங்க சொன்னாங்க…

– க்ருஷ்ணவேணி தினேஷ்

தொடரும்… 

https://patrikai.com/most-mens-are-make-problem-vaikom-vijayalakshmi-interview/

 

என்னோட ஹீரோ தாசேட்டன்(யேசுதாஸ்) தான்! மனம் திறக்கிறார் ‘வைக்கம்’ விஜயலட்சுமி