பாடகி வைக்கம் விஜயலட்சுமி  பேட்டி – 3

வைக்கம் மஹாதேவர் பக்தை நீங்க.. கல்யாணத்தைப்பற்றி கோயில்ல போய் பகவான் கிட்டே கேட்கலையா?

திருமணம் நிச்சயதாம்பூலத்துக்கு முன்னரே வைக்கத்தப்பன் திரு நடையில் நின்று மானசீகமாக பிரார்த்தித்தேன். “நல்லா யோசிச்சு முடிவெடுன்னு” பகவான் சொல்ற மாதிரி இருந்தது.

இதை அம்மாகிட்டே சொன்னேன்..அவங்களுக்கு மன சமாதானமாச்சு..”இப்போ சந்தோஷ் தனியா இருக்காரு. கல்யாணம் முடிஞ்சு இங்கே வந்ததுக்கப்புறம் இன்னும் நல்லாருக்குக்கும்”னு சொன்னதுமாதிரி தோணிச்சு.

ஆனால் நிச்சயத்துக்கப்புறம்   இந்த கல்யாணம் வேண்டாம்னு அடிக்கடி தோணிச்சு. திரும்பவும் கோயில் முன்னாடி போய் சிவபார்வதி தேவியின் முன்பு போய் பிரார்த்தித்தால் அவர்கள் “வேண்டாம் இந்த கல்யாணம்” என்றது போலிருந்தது.

இனியொரு கல்யாண பேச்சு வார்த்தை வந்தால்…?

நல்ல முறையில்… வருமானம் என்பதைப்பற்றியொன்றும் நினைக்காமல் என்னையும் எனது பெற்றோரையும் முழுமையாக புரிந்து கொண்டு என்னை திருமணம் செய்ய முன்வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன்.

திருமணம் நிச்சயம் செய்யப்போகும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி சம்மதிக்க வைச்சாங்கன்னா அதற்கு சம்மதிக்கவே கூடாது. நம்முடைய சுயமரியாதைக்கு இழுக்கு வரும்படியாக நடந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆண்கள் சொல்வதைக்கேட்டு உடனே அடிமையாக நடக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழிலும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் பாடல்கள் பல பாடினீங்க.. இது எப்படி சாத்தியமாச்சு?

அப்பா அம்மாவோட உற்சாகப்படுத்து தல்தான்  எல்லாவற்றுக்கும் காரணம். எனக்கு சங்கீதத்தில ஆர்வம் இருக்குங்கிறதை கண்டுபிடிச்சதே என்னோட பெற்றோர்தான்.

நான் ஐந்து வயது வரை சென்னையில்தான் இருந்தேன். அப்பாவுக்கு சுவிட்ச் போர்டு தொடர்பான பிஸினஸ் பண்ணிட்டு இருந்தார்.  ஆறாவது வயசில் நான் தாசேட்டனுக்கு (பாடகர் ஏசுதாஸ்) குருதட்சணை சமர்பித்தேன். அன்றைக்கு கேசட்டுகளில் தாசேட்டனின் பாடல்களை பதிவு செய்துதான் நான் சங்கீதம் கேட்டுப்படித்தேன்.

வாதாபி கணபதிம், கருணைக்கடலேன்னு பல பாடல்களையும் படிச்சது இப்படித்தான். அவரோட குரல்தான் என்னோட சின்ன வயது நண்பன். என்னோட ஹீரோவும் தாசேட்டன் தான்.

அப்புறம் தாசேட்டனும், ஜெயச்சந்திரனும் பலதடவை எனக்கு போன் மூலமாக சங்கீதம் படிச்சுத் தந்தாங்க.. தாசேட்டனின் வீட்டிற்கும் போயிருக்கேன். அவரோட உருவம் ஒன்றும் என்னோட மனசில் இல்லை. அவரை நினைக்கும்போது கந்தர்வநாதம் மனசில் கேட்கும்.

வேறு பாடகிகளுடன் உங்களுக்கு தொடர்பு உண்டா?

ஜானகியம்மா, வாணி ஜெயராமம்மா, மாதுரியம்மா,  சுசீலாம்மா, சித்ரா சேச்சி  எல்லோருமே எனக்கு உயிரு.. இவங்களை எல்லாம் நான் பார்த்தது கிடையாதுன்னாலும் அவங்ககூட நேரில் பேச முடிஞ்சது என்னோட பெரிய பாக்கியம்.

சென்னை சர் வாணி சங்கீத சபையில் வைத்து ஜானகியம்மாவின் குரலைக்கேட்டன். அதன்பிறகு ஜானகியம்மாவின் ஹைதராபாத் வீட்டுக்குப்போனேன். அன்றைக்கு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். போனில் சிலவேளைகளில் அவங்க என்னை கூப்பிடுவாங்க.

ஜானகியம்மா இனி பாடுறது இல்லைன்னு முடிவு செய்திருக்கிறாங்கன்னு உங்களுக்குத்தெரியுமா?

அதை என் கிட்டேயும் சொல்லியிருந்தாங்க. குரலுக்கு சில பிரச்சனைகள், மூச்சுத்திணறல், இருமல்..அப்படி சில பிரச்சனைகள்.  பாடுறவங்களுக்கு எப்பவுமே தொண்டை பிரச்சனைதான்.

நான் பாடப்போகும் நாளில் தேன் சேர்த்து ஒரு வெத்திலை சாப்பிடுவேன்.  அப்புறம் கொஞ்சம் ஓய்வு எடுப்பேன். தினமும் பாடணும்னா கொஞ்சம் மன அழுத்தம் ஏற்படும்.

பாடகியான உங்களின் வேறு பழக்க வழக்கங்கள்…?

வீட்டில் இருக்கும் போது பாட்டு கேட்டுகிட்டிருப்பேன். அம்மா சமையல் செய்தாங்கன்னா சின்னச்சின்ன உதவிகள் என்னாலானது செய்வேன். வீணான்னு சொல்லி என்னோட பிரண்ட் ஒருத்தி அப்பப்ப வீட்டுக்கு வருவா.அவகூட விளையாடுவேன். நான் இப்போதும் சின்னப்பொண்ணுதான்…

கலகலவென சிரிக்கிறார் விஜயலட்சுமி…

(முற்றும்)

– க்ருஷ்ணவேணி தினேஷ்

https://patrikai.com/wp-admin/post.php?post=718424&action=edit

https://patrikai.com/most-mens-are-make-problem-vaikom-vijayalakshmi-interview/