சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை  இதுவரை ரூ.208 கோடி அளவிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு  முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்தார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செலவின பார்வையாளர் அறிவிக்கை சமர்பிக்க உள்ளார். ரூ. 1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறியவர்,  தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி வரையிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் வாக்கு செலுத்துவதற்கான பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியவர்,  தமிழகத்தில் இதுவரை 36.4% பூத் ஸ்லிப்கள்(தகவல் சீட்டு) வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும், திமுக எம்எல்ஏ காலமானதால் காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,   விக்கரவாண்டி தொகுதி காலி என தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.