சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த வாரம் தொடங்கிய நிலையில்,  இதுவரை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2.25லட்சம் பேரும், பொறியியல் படிப்புக்கு 91,834 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்ப படிவம், கடந்த 22ந்தேதி (ஜூன்)  தொடங்கியது.  https://tngasa.org/, https://tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங் கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இசேவை மையம், கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இணையதள வாயிலாகச் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 6” என்ற பெயரில் 27/06/2022 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 5 நாளில் (ஜூன் 27) 2,24,514 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில், 1,74,941 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். 1,51,206 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அதுபோல, பொறியியல் படிப்புக்கு நேற்று (ஜூன் 27)  மாலை 6மணி வரை 91,834 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதே நாளில், பொறியியல் மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டது. மாணாக்கர்கள் ஆன்லைனில் விண்ணபங்களை பதிவு செய்து வருகின்றனர். கடந்த 8 நாட்களில் 91,834 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 50,427 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 24,322 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணாக்கர்களிடையே பொறியியல் மோகம் வெகுவாக குறைந்துவிட்டதையே விண்ணப்ப பதிவுகள் பறைசாற்றுகின்றன.

இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர, https://tneaonline.org இணையதளத்தில் ஜூலை 19வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.