பனாஜி

புற்றுநோய் பாதிப்பில் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிகிச்சை பலனின்றி  காலமானார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளியே பாஜக தலைவர்களிடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நடைபெற்றுள்ளது. பாஜகவினரின் நாற்காலி ஆசை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோவா மாநில முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர் புற்று நோய் காரணமாக நேற்று மாலை மரணம அடைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கோவாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

இதற்கிடையில் பாரிக்கருக்கு  புற்றுநோய் பாதிப்பு தெரிய வந்த நிலையில், அவரது இடத்தை கைப்பற்ற பாஜகவினரிடையே பெரும் போட்டி நிலவி வந்தது. இதற்கிடையில் காங்கிரசாரும், ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கோவாவில் நடைபெற்ற அரசியல் சதுரங்கம் தற்போது அம்பலத் துக்கு வந்துள்ளது. மனோகர் பாரிக்கர் உடல் பாஜக அலுவலகத்தில் இருந்தபோதே அடுத்த முதல்வர் யார் என தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளைபாஜகவினர் தொடங்கி விட்டனர். சிலர் முதல்வர் பதவியை பிடிக்கவும் கோதாவில் இறங்கினர்.

இதைத்தொடர்ந்து நள்ளிரவு கோவா வந்த மத்திய அமைச்சர் நிதிக் கட்கரி, அம்மாநில பாஜக மற்றும் கூட்டணி கட்சியான எம்ஜிபி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

நள்ளிரவு முழுவதும் இந்த பேச்சு வார்த்தை நீடித்தது. மனோகர் பாரிக்கர் இந்த உலகை விட்டு நித்திய தூக்கத்திற்கு சென்றுவிட்ட நிலையில்,  பாஜக நிர்வாகிகளோ நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நிதின் கட்கரி பாஜக தலைவர்களிடமும், கூட்டணி கட்சி களிடமும் பலமுறை பேசி அவர்களை சமாதானப்படுத்தி வந்தார். இதற்கிடையில் முதல்வர் பதவியை பிடிக்க சில பாஜக நிர்வாகிகள் முயற்சி செய்த, நேற்று முதல் கோவாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மறைந்த மாநிலத்தின் முதல்வர்  உடல் பாஜக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு பகுதியில், பதவியை பிடிக்க பாஜகவினர் நடத்திய அரசியல் பேரம் பெரும் பரபரப்பையும், பாஜகவினர் மீதான மதிப்பையும் குழிதோண்டி புதைத்துள்ளது.