மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் கடந்த வாரம் இரண்டு சிறுத்தைகள் இறந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்நடை மற்றும் வனவிலங்கு நிபுணர் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலர்களே காரணம் என்று கூறியுள்ளார்.

அட்ரியன் டோர்டிஃப் என்ற அந்த நிபுணர் வெளியிட்டிருக்கும் தகவல் வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1960 ம் ஆண்டுக்குப் பிறகு சிறுத்தை புலியின் எண்ணிக்கை இந்தியாவில் அருகி வருவதை அடுத்து ஆபிரிக்க நாடுகளிடம் இருந்து 20 சிறுத்தைகள் வாங்கப்பட்டது.

புதிய வாழ்விடத்தில் இவற்றின் நடமாட்டத்தை சுமார் 400 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் ரேடியோ காலர்களைப் பயன்படுத்தி கண்காணிக்க ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்போதே பொருத்தப்பட்டது. இந்த சிறுத்தைகளை இந்தியா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தியா கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஐந்து சிறுத்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளது தவிர, மார்ச் மாதம் ஒரு பெண் சிறுத்தைக்கு பிறந்த நான்கு குட்டிகளில் மூன்று பட்டினி மற்றும் வெப்பத்தால் இறந்துள்ளன.

இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு சிறுத்தைகள் இறந்ததை அடுத்து இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. இரண்டாவதாக இறந்த சிறுத்தையின் உடற்கூறாய்வு வீடியோ-வை ஆய்வு செய்த அட்ரியன் டோர்டிஃப் அந்த சிறுத்தையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ காலருக்கு கீழ் ஈரமாக இருந்ததையும் அதன் மூலம் தொற்று கிருமிகள் சிறுத்தையின் உடலில் நுழைந்து செப்டிசீமியா ஏற்படுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பருவமழை மற்றும் உஷ்ணம் காரணமாக கழுத்துப் பட்டைக்கு கீழ் நீர் கோர்த்துக் கொண்டு தோல் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த அவர் கழுத்துப்பட்டையால் வனவிலங்குக்கு இதுபோன்ற விபரீதம் ஏற்படும் என்பதை ஆய்வாளர்கள் முன்கூட்டிய கணிக்க தவறியதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.