டில்லி

டுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.  சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்து வெற்றி  பெற முடியாது எனத் தெரிவித்திருந்தார்.   நேற்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை சஞ்சய் ராவத் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். 

அதன் பிறகு சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம், “நான் பிரியங்கா காந்தியுடன் நடத்திய சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது.   இரு கட்சிகளுக்கும் இணைந்து உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசித்துள்ளோம்.   வாய்ப்பு ஏற்பட்டால் உத்தரப் பிரதேசம் மற்றும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிறகு சஞ்சய் ராவத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளேன்.  ராகுல் காந்தி தலைமை ஏற்றால் சிவசேனா அந்த கூட்டணியில் இணையும் ஏற்கனவே மகாராஷ்டிராவில் சிறிய அளவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளோம்.  தேசிய அரசியலிலும் அது நிகழலாம்” எனத் தெரிவித்துள்ளார்.