சென்னை:
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 92-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டப்பட்டு அங்கு அவருக்கு திருவுருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதல் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில், சிவாஜி மணி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ சிலைக்கு தமிழகஅரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். . இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, நடிகர் பிரபு உள்பட திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.
சிவாஜிகணேசன் பிறந்தநாளை தமிழக திரையுலகம் சார்பிலும் இன்று கொண்டாடப்படுகிறது. திரையுலகத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றன இதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதுபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், பொது இடத்தில், நடிகர்திலகத்தின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றன. ரத்ததானம், அன்னதானம், போன்ற சமூக நலப்பணிகளும் நடைபெறுகின்றன.
சிவாஜி சிலைக்கு மரியாதை செய்ததை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சிவாஜி பற்றி நாள்முழுவதும் பேசி கொண்டிருக்கலாம்; எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி என்று புகழாரம் சூட்டினார்.