சென்னை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தமிழகத்தின் பல்வேற மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தது தொடர்பாக இதுவரை 6பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் இன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகிறார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவர் மோரிசியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தேடிவருகிறது. இதற்கிடையில், இர்ஃபானின் தந்தை மருத்துவர் சஃபி நேற்று முன்தினம் வாணியம்பாடியில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர்தான் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு நீட் ஏஜென்ட்டை அறிமுகம் செய்துவைத்தவர். இதையடுத்து சஃபியிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசராஜ், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அவர், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.