சென்னை

சென்னை ஐஐடியில் பயிலும் கவிதா கோபால் மூன்று உயரிய  விருதுகளைப் பெற்ற முதல் பெண் என்னும் தகுதியை அடைந்துள்ளார்.

சென்னை ஐஐடி மாணவியான கவிதா கோபால் 2015-19 ஆம் கல்வி ஆண்டில் கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார்.   இவர் தனது பள்ளிப் படிப்பை கல்பாக்கம்  அணு சக்தி மத்திய பள்ளியில் முடித்துள்ளார்.   அதன் பிறகு கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயாவில் தனது உயர்கல்விப் படிப்பை முடித்தவர் ஆவார்.    அவர் தனது விருப்பப் பாடமாக கணினி விஞ்ஞானத்தை தேர்ந்தெடுத்தார்.

அதன் பிறகு 2015 ஆம் வருடம் கவிதா சென்னை ஐஐடியில்  பொறியியல் பட்டப் படிப்பிலும் கணினி விஞ்ஞானத்தை தேர்ந்தெடுத்தார்.   கணினியின் சி++, ஜாவா என அனைத்து மொழிகளிலும் இவர் முன்னிலை வகித்துள்ளார்.   கல்லூரியில் கணினி தொடர்பான பல போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை அள்ளியுள்ளார்.     அது மட்டுமின்றி  கூடைப்பந்து போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

கவிதாவின் சாதனையில் முக்கியமானது நேற்று நடந்த 56ஆம் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள் ஆகும்.   கல்வியில் சிறந்து விளங்கும் மாணவி என்னும் ஜனாதிபதி விருது அவருக்கு நேற்று அளிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் இதுவரை இந்த விருதை எந்தப் பெண்ணும் வாங்கியது இல்லை.

அது மட்டுமின்றி பெருமைக்குரிய மேலும் இரு விருதுகளையும் கவிதா கோபால் பெற்றுள்ளார்.   கணினி விஞ்ஞானப் படிப்புகளில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றதற்காக விஸ்வேரஸ்வரையா நினைவு விருது மற்றும் ரவிச்சந்திரன் நினைவு விருது ஆகியவையும் அவர் பெற்றுள்ளார்.  சென்னை ஐஐடியில் இதுவரை இந்த விருதுகளை மாணவர்கள் மட்டுமே வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.