சென்னை:

மிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களிலும் குறிப்பாக,
அரியலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரத்துக்கு லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4ம் தேதிக்கு பின்னர் வெப்பசலனம் காரணமாக மீண்டும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி அதிபட்சமாக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 15 செ.மீ. மழையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. நீலகிரி, குந்தா அணைக்கட்டுப் பகுதியில் 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. கொடைக்கானல், தென்காசி, அதிரம்பட்டினம்(தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. ராஜபாளையம், சாத்தான்குளம், திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

இதுதவிர, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து இருந்தது.

‘இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.